டெல்லியை வீழ்த்தி சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடம்!!

சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி சென்னை அணி 7-வது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 55-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே ஆகியோர் களம் இறங்கினர். மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் டெல்லி அணியின் பவுலர்கள் தொடக்கம் முதலே அருமையாக பந்து வீசி கடும் நெருக்கடி அளித்தனர்.
நிதானமாக ஆடிய டிவான் கான்வே 10 ரன்னில் (13 பந்து, ஒரு பவுண்டரி) அக்ஷர் பட்டேலின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இஷாந்த் ஷர்மா வீசிய ஒரு ஓவரில் 3 பவுண்டரிகள் விரட்டிய ருதுராஜ் கெய்க்வாட் 24 ரன்னில் (18 பந்து, 4 பவுண்டரி) அக்ஷர் பட்டேல் பந்து வீச்சில் அமன்கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தது.
அடுத்து வந்த மொயீன் அலி 7 ரன்னில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். ரஹானே 21 ரன்னில் (20 பந்து, 2 பவுண்டரி) லலித் யாதவ் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரஹானே அடித்து தாழ்வாக தன்னை நோக்கி வந்த பந்தை லலித் யாதவ் ஒற்றை கையில் அபாரமாக கேட்ச் செய்து அசத்தினார்.
இதைத்தொடர்ந்து ஷிவம் துபே, அம்பத்தி ராயுடுவுடன் இணைந்தார். 14-வது ஓவரில் ஷிவம் துபே 2 சிக்சரும், அம்பத்தி ராயுடு ஒரு சிக்சரும் அடித்து சோர்ந்து போய் இருந்த சென்னை ரசிகர்களை குஷிப்படுத்தியதுடன் அணி 100 ரன்னை கடக்கவும் வைத்தனர். அதிரடி காட்டிய ஷிவம் துபே 25 ரன்னில் (12 பந்து, 3 சிக்சர்) மிட்செல் மார்ஷ் பந்து வீச்சில் பவுண்டரி எல்லையில் டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சற்று நேரத்தில், 200-வது ஆட்டத்தில் ஆடிய அம்பத்தி ராயுடு 23 ரன்னில் (17 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) கலீல் அகமது பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
இதையடுத்து டோனி, ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்தார். இருவரும் வேகமாக மட்டையை சுழற்றினர். கலீல் அகமது வீசிய ஒரு ஓவரில் டோனி 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். அப்போது ரசிகர்கள் கரகோஷத்தால் ஸ்டேடியமே அதிர்ந்தது. கடைசி ஓவரில் மிட்செல் மார்ஷ் வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரவீந்திர ஜடேஜா (21 ரன்கள், 16 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதே ஓவரில் டோனியும் (20 ரன்கள், 9 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
20 ஓவர்களில் சென்னை அனி 8 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. தீபக் சாஹர் ஒரு ரன்னுடனும், துஷார் தேஷ்பாண்டே ரன் ஏதுமின்றியும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். டெல்லி அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்டும், கலீல் அகமது ஒரு விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர்கள் அக்ஷர் பட்டேல் 2 விக்கெட்டும், லலித் யாதவ், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. முதல் ஓவரில் தீபக் சாஹர் வீசிய 2-வது பந்தில் கேப்டன் டேவிட் வார்னர் (0) ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் பில் சால்ட் 17 ரன்னிலும், அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 5 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் அந்த அணி 25 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை (3.1 ஓவரில்) இழந்து தத்தளித்தது. இந்த சரிவில் இருந்து அந்த அணியால் கடைசி வரை மீள முடியவில்லை.
சற்று நேரம் தாக்குப்பிடித்து போராடிய மனிஷ் பாண்டே 27 ரன்னிலும் (29 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), ரிலீ ரோசவ் 35 ரன்னிலும் (37 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அக்ஷர் பட்டேல் (21 ரன்கள், 12 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரிபல் பட்டேல் (10 ரன்), லலித் யாதவ் (12 ரன்) ஆகியோரும் நிலைக்கவில்லை.
சென்னை அணி வெற்றி
20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களே எடுத்தது. இதனால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் பதிரானா 3 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
12-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 7-வது வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பெற்று அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை பிரகாசப்படுத்தியது.