ஸ்ரீ யுக்தேஷ்வர் ஜெயந்தி…கோவை யோகதா சத்சங்க தியான கேந்திரத்தில் கொண்டாட்டம்..

ஸ்ரீ யுக்தேஷ்வர் ஜெயந்தி…கோவை யோகதா சத்சங்க தியான கேந்திரத்தில் கொண்டாட்டம்..

கோவை:

மகான் யோகானந்தரின் மகத்தான குரு சுவாமி ஸ்ரீ யுக்தேஷ்வர் ஆவார். இவரது 168 ஆவது பிறந்த தினம் 10/5/2023 அன்று மாலை கோயமுத்தூரில் உள்ள யோகதா சத்சங்க தியான கேந்திரத்தில் கொண்டாடப்பட்டது.

முகுந்தனை முக்தி நெறியில் வழிநடத்தி மகான் யோகானந்தராக ஆக்கிய பெருமை மகான் ஸ்ரீ யுத்தேஷ்வரரையே சாரும். அவரைப் பற்றிய சில  தகவல்கள் ஒரு யோகியின் சுயசரிதம் என்ற ஒப்பற்ற  நூலிலிருந்து எடுத்துரைக்கப்பட்டன.

காலம் காலமாகக் காத்து இருந்த பின்னரே, குரு- சிஷ்ய சந்திப்பு காசியில் உள்ள ஒரு குறுகிய சந்தில் நிகழ்ந்தது. அகத்தே நிழற் காட்சியாக் கண்ட குருவை புறத்தே நிஜக் காட்சியாக தரிசித்தபோது முகுந்தன் தனது குருவால் இரும்பு காந்தத்தால் கவரப்படுவது போல ஈர்க்கப்பட்டான். மகான் பாபாஜி கட்டியம் கூறியது போல கிரியா யோகக் கலையை குருவிடம் முறையாக பயின்று பாரெங்கும் பரப்ப இச்சந்திப்பு வித்திட்டது.பத்து ஆண்டுகள் ஸ்ரீ யுக்தேஷ்வரரால் கடுமையாகப் பயிற்றுவிக்கப்பட்ட பின்னரே, யோகானந்தரின் உலகளாவிய ஆன்மீகப் பணி தொடங்கியது.

இந்த நிகழ்வில் யோகதா சத் சங்க உறுப்பினர்களும், அவர்களது குடும்பத்தாரும், பொதுமக்கள் சிலரும் பங்கேற்றுப் பயன் பெற்றனர்.
யோகானந்தர் இயற்றிய பிரபஞ்ச கீதங்கள் சில  இசையுடனும், பக்தியுடனும் இசைக்கப்பட்டன. அன்பர்கள் சிறிது நேரம் குருவை நினைத்து தியானித்தனர்.
தங்களது பக்தி மற்றும் விசுவாசத்தின் வெளிப்பாடாக மலர்கள் மற்றும் காணிக்கைகளை பரமகுருவிற்கு அன்பர்கள் சமர்ப்பித்து வழிபட்டனர்.

கிரியா யோகத்தை முறைப்படி பயில யோகானந்தரின் ஆன்மீகப் பாடங்களை இல்லத்திற்கே தருவித்துப் படிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. தியான உத்திகளை முறைப்படி கற்றுத் தெளிவு பெற ஜூலை 21 லிருந்து 23 வரை கோயமுத்தூர் எஸ். எஸ். வி. எம். உலகப் பள்ளியில் ராஞ்சி லிருந்து வரும் யோகதா சத்சங்க சொசைட்டி சந்நியாசிகளால் நடத்தப்பட உள்ள ஆன்மீக நிகழ்வில் தவறாது கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள்  விடுக்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் விழாவின் இறுதியில் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.

Leave a Reply