குளத்தை ஆக்கிரமித்ததாக கூறி நடு ரோட்டில் கட்டில் போட்டு அமர்ந்து பஸ்ஸை மறித்த திமுக பிரமுகர்…

புதுக்கோட்டை;
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்துள்ளது கொத்தமங்கலம் பகுதி. அந்தப் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் முத்து துரை.
இவர் பேராவூரணி வழியாக செல்லும் A7 என்ற எண் கொண்ட பேருந்தை மறித்து சாலையில் கட்டில் போட்டு அதன் மேல் அமர்ந்து கொண்டு அட்டகாசம் செய்தார். தகவலறிந்த அங்கு வந்த காவல் ஆய்வாளர் பாஸ்கரன் ஆத்திரமடைந்து கட்டிலை தூக்கி ஓரமாக வீசியதுடன் அவரை எச்சரிக்கை செய்தார் .
பேருந்தை வழிமறித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது,
‘கொத்தமங்கலத்தில் உள்ள 28 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தில் கடந்த 15 நாட்களாக மண் அள்ளப்படுவதாக கூறப்படும் நிலையில் குளத்தை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்வதாகவும் அவர்களிடம் இருந்து நிலத்தை கைப்பற்றிய பின்னர்தான் குளத்தில் மண் அள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த மறியலை முத்து துரை மேற்கொண்டதாகத் தெரியவந்துள்ளது.
குளத்தை மீட்கவில்லை என்றால் இப்படி மட்டுமல்ல தீக்குளித்தும் போராட்டம் நடத்துவேன் என, தன்னை எச்சரித்த போலீசாரை திரும்பப் பதிலுக்கு மீண்டும் எச்சரித்துச் சென்றார் முத்து துரை.
இதனால் அங்கு சில மணி நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.