மீன் குட்டைக்கு மானியம் வழங்க 31 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மீன்வளத்துறை ஆய்வாளர்… பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்..

ஈரோடு மாவட்டம்;
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பி. மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு இரையாம்பாளையம் என்ற பகுதியில் மீன் குட்டை அமைப்பதற்கு மத்திய அரசின் சார்பில் மானியம் வழங்கப்பட்டது.
மானியம் பெறுவதற்காக மீன்வளத்துறை ஆய்வாளர் அருள்ராஜ் கார்த்திகை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் கார்த்திக்கிடம், மீன் குட்டை அமைப்பதற்கான மானியத்தை வழங்குவதற்கு 31 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திக் இதுகுறித்து உடனடியாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறை நிறுவனம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் ரசாயனம் தடவிய 31 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கார்த்திக்கிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.
அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் கார்த்திக்கும் கடந்த மூன்று நாட்களாக அந்த பணத்தை மீன்வளத்துறை ஆய்வாளர் அருள் ராஜிடம் கொடுப்பதற்காக அவரை தொடர்பு கொண்டு உள்ளார்.
ஆனால் அவர் பணத்தை பெற்றுக்கொள்ளாமல் அங்கும் இங்கும் ஆக கார்த்திக்கை அலைகழித்துள்ளார். இந்நிலையில் இன்று மீன்வளத்துறை ஆய்வாளர் அருள்ராஜ், கார்த்திக்கை ஓடத்துறை என்ற பகுதிக்கு லஞ்ச பணத்தை கொண்டு வருமாறு கூறி அழைத்துள்ளார்.
கார்த்திக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு அவர்கள் கொடுத்த 31,000 ரூபாய் லஞ்ச பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் ஒரு இடத்தில் மறைந்து கொண்டு அங்கு நடப்பவற்றை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கார்த்திக்கிடம் இருந்து மீன்வளத்துறை ஆய்வாளர் அருள்ராஜ் பணத்தை பெற்றுக் கொண்டு அவரது பாக்கெட்டில் வைத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் காவல் துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் மீன்வளத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.