பால்குடம் எடுத்து வந்த பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்த நிர்வாகம் …. அதிருப்தியில் கோயில் வளாகத்திலேயே பாலை கொட்டி சென்ற பக்தர்கள்…

தூத்துக்குடி:
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கோடை விடுமுறையின் காரணமாக நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோயில் நிர்வாகம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த 06 ஆம் தேதி காவடி சுமந்து பாதயாத்திரையாகத் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் வந்த பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக 51 குடங்களில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த வந்துள்ளனர்.
அப்போது கோயில் நிர்வாகத்தினர்கள் அந்த பக்தர்களை உள்ளே அனுமதிக்காததால், ஏமாற்றமடைந்த பக்தர்கள் தங்கள் சுமந்து வந்த சுமார் 51 பால் குடத்தையும் கிரி பிரகாரத்திலேயே கொட்டி சென்றுள்ளனர்.
இதனால் கிரிவல பிரகாரம் முழுவதும் வழிந்தோடிய அபிஷேக பாலை பக்தர்கள் மிதித்து நடந்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. சுமார் 9 நாட்களாக 250 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக வந்து வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லை எனப் பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்குத் தனி வரிசை இருந்தபோதிலும், அதைக் கோயில் நிர்வாகம் முறையாகக் கடைப்பிடிக்காமல் பாதயாத்திரையாக வந்த பக்தர்களின் வேண்டுதல்களை அலட்சியப்படுத்தி வந்ததால் நடைபெற்ற இந்த சம்பவம் பக்தர்களுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது.
இந்நிலையில் கோயில் நிர்வாகம் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.