சென்னைக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா ”6-வது வெற்றி”

சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னைக்கு பதிலடி கொடுத்து கொல்கத்தா அணி 6-வது வெற்றியை பெற்றது.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 61-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சை சந்தித்தது.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே ஆகியோர் களம் கண்டனர். மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா 4-வது ஓவரிலேயே சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தியை பந்து வீச அழைத்தார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. ருதுராஜ் கெய்க்வாட் (17 ரன், 13 பந்து, 2 பவுண்டரி), வருண் சக்ரவர்த்தி பந்து வீச்சை அடித்து ஆட முயற்சித்து வைபவ் அரோராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து வந்த ரஹானேவும் நிலைக்கவில்லை. ஹர்ஷித் ராணா வீசிய ஒரு ஓவரில் பவுண்டரி, சிக்சர் விளாசிய ரஹானே 16 ரன்னில் (11 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) வருண் சக்ரவர்த்தி பந்து வீச்சில் பவுண்டரி எல்லையில் ஜாசன் ராயிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் டிவான் கான்வே 30 ரன்னில் (28 பந்து, 3 பவுண்டரி) ஷர்துல் தாக்குர் வேகப்பந்து வீச்சில் பவுண்டரி எல்லையில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் ஆனார்.
இதையடுத்து ஷிவம் துபே களம் புகுந்தார். மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார். அவரது பந்து வீச்சில் அம்பத்தி ராயுடு 4 ரன்னிலும், மொயீன் அலி 1 ரன்னிலும் அடுத்தடுத்து போல்டு ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் சென்னை அணி 72 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அடுத்து ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபேவுடன் கைகோர்த்தார். ஷிவம் துபே, வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் ஷர்மா ஆகியோரின் சுழற்பந்து வீச்சில் சிக்சர் விளாசி ரசிகர்களை மகிழ்வித்ததுடன் அணியையும் சரிவில் இருந்து மீட்டார்.16.1 ஓவர்களில் சென்னை அணி 100 ரன்னை கடந்தது.
கடைசி ஓவரில் ரவீந்திர ஜடேஜா 20 ரன்னில் (24 பந்து, ஒரு சிக்சர்) வைபவ் அரோரா பந்து வீச்சை தூக்கி அடித்து வருண் சக்ரவர்த்தியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து கேப்டன் டோனி பேட்டிங் செய்ய வந்தார். அப்போது அரங்கமே அதிரும் வகையில் ரசிகர்கள் ‘டோனி, டோனி’ என்று குரல் எழுப்பினர். வழக்கமாக சிக்சர் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தும் டோனியால் இந்த ஆட்டத்தில் 2 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அவர் நோ-பால் வாய்ப்பையும் பயன்படுத்த தவறினார்.
145 ரன் இலக்கு
20 ஒவர்களில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. இந்த சீசனில் சென்னை அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். ஷிவம் துபே 48 ரன்னுடனும் (34 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), டோனி 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரின் தலா 2 விக்கெட்டும், வைபவ் அரோரா, ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் ரமனுல்லா குர்பாஸ் 1 ரன்னிலும், அடுத்து வந்த வெங்கடேஷ் அய்யர் 9 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் ஜாசன் ராய் 12 ரன்னிலும் கேட்ச் கொடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இந்த 3 விக்கெட்டையும் தீபக் சாஹர் வீழ்த்தினார். இதனால் அந்த அணி 33 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை (4.3 ஓவரில்) இழந்து பரிதவித்தது.
இந்த இக்கட்டான சூழலில் ரிங்கு சிங், கேப்டன் நிதிஷ் ராணாவுடன் இணைந்தார். இருவரும் சிறப்பாக ஆடி அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினர். 39 பந்துகளில் 3-வது அரைசதத்தை எட்டிய ரிங்கு சிங் 54 ரன்னில் (43 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) மொயீன் அலியால் ரன்-அவுட் செய்யப்பட்டார்.
கொல்கத்தா அணி வெற்றி
18.3 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 18 ரன்னில் இருக்கையில் மொயீன் அலி பந்து வீச்சில் பதிரானா ‘கேட்ச்’ வாய்ப்பை கோட்டை விட்டதால் தப்பிப்பிழைத்த நிதிஷ் ராணா 57 ரன்னுடனும் (44 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஆந்த்ரே ரஸ்செல் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
13-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 5-வது தோல்வியை சந்தித்தாலும் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. கொல்கத்தா அணி 6-வது வெற்றியை பெற்றதுடன், சென்னைக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. அத்துடன் 2012-ம் ஆண்டுக்கு பிறகு சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் கொல்கத்தா அணி வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.
போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தோல்விக்கு யாரையும் குறை கூறமுடியாது. அனைவரும் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்தனர் என்று தோனி கூறினார்.