திண்டுக்கல்லில் கத்திபோடும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய கோவில் திருவிழா!!

திண்டுக்கல்லில் கத்திபோடும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய கோவில் திருவிழா!!

திண்டுக்கல் கிழக்கு ரதவீதியில் ராமலிங்க சவுண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. அதன்படி திருவிழா நேற்று தொடங்கியது.


அம்மனை அழைக்க, உடலை வருத்தி கத்திபோடும் நிகழ்ச்சி நடத்தப்படுவது ஐதீகம் ஆகும். அதன்படி நேற்று பகல் 12 மணியளவில் கோவிலில் கத்தி போடும் பக்தர்களுக்கு பட்டம் கட்டுதல் நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் வீரபாண்டியம்மன் கோவில் தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பக்தி பரவசத்துடன் கத்தி போட்டபடி பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

முன்னதாக காலை 7 மணிக்கு அம்மனுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதன்பிறகு உப்புக்கேணி விநாயகர் கோவிலில் இருந்து சீர்வரிசை கொண்டு வருதல் நடைபெற்றது. இரவு 7 மணி அளவில் மகா தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு யானைத்தெப்பத்தில் இருந்து வீரபத்திர சுவாமி அழைப்பு நடக்கிறது. அதைத்தொடர்ந்து நாளை (புதன் கிழமை) சாமுண்டி ஊர்வலம், நாளை மறுநாள் பண்டாரி ஊர்வலமும் நடக்கிறது.

அதன்பின் திருவிழாவின் ஐந்தாவது நாளான (வெள்ளிக்கிழமை) பால்குட ஊர்வலம், பொங்கல் வைத்தல் நடக்கிறது. அன்று மாலை 6 மணியளவில் மகாஜோதி ஊர்வலம் கோவிலில் இருந்து தொடங்கி கத்தி போடுதல் நிகழ்வுடன் ரத வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைகிறது.

திருவிழாவின் நிறைவு நாளான 20-ந்தேதி (சனிக்கிழமை) காலையில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டும், அதன் பிறகு சுவாமி ராமலிங்கேஸ்வரர்- சவுண்டேஸ்வரி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அதன்பிறகு பக்தர்கள் மஞ்சள் நீராட்டு, புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது.

Leave a Reply