ஐதராபாத்தை வெளியேற்றி குஜராத் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி!!

ஐதராபாத்தை வெளியேற்றி குஜராத் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி!!

ஆமதாபாத்,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஐதராபாத்தை வெளியேற்றி குஜராத் அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றிரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 62-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்சை சந்தித்தது.

‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சஹா (0) முதல் ஓவரிலேயே புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற அபிஷேக் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து சாய் சுதர்சன், தொடக்க வீரர் சுப்மன் கில்லுடன் இணைந்தார். இருவரும் தொடக்கம் முதலே வேகமாக மட்டையை சுழற்றினர். வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து துரிதமாக ரன் சேகரித்தனர். பசல்ஹக் பரூக்கி பந்து வீச்சில் தொடர்ச்சியாக 4 பவுண்டரி விளாசிய சுப்மன் கில் 22 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். 10 ஓவர்களில் குஜராத் அணி 100 ரன்னை எட்டியது.

நேர்த்தியாக ஆடிய சாய் சுதர்சன் 47 ரன்னில் (36 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) மார்கோ யான்சென் பந்து வீச்சில் பவுண்டரி எல்லையில் நடராஜனிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அப்போது அணியின் ஸ்கோர் 14.1 ஓவர்களில் 147 ரன்னாக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்-சாய் சுதர்சன் ஜோடி 147 ரன்கள் சேர்த்து அசத்தியது. இதனால் அந்த அணி 200 ரன்களை எளிதாக கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அடுத்து வந்த வீரர்கள் வந்த வேகத்திலேயே ஆட்டம் இழந்து நடையை கட்டினர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 8 ரன்னிலும், டேவிட் மில்லர் 7 ரன்னிலும், ராகுல் திவேதியா 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி ரசிகர்களை குஷிப்படுத்திய சுப்மன் கில் 56 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். ஐ.பி.எல். போட்டி தொடரில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். நடப்பு தொடரில் அடிக்கப்பட்ட 6-வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஓவரில் சுப்மன் கில் (101 ரன்கள், 58 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் அப்துல் சமத்திடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதே ஓவரில் ரஷித் கான், முகமது ஷமி ஆகியோர் ரன் ஏதுமின்றி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். நூர் அகமது (0) ரன்-அவுட் ஆனார்.

20 ஓவர்களில் குஜராத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. 2 வீரர்கள் தவிர யாரும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை. ஐதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டும், மார்கோ யான்சென், பசல்ஹக் பரூக்கி, நடராஜன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க வீரர்கள் அன்மோல்பிரீத் சிங் 5 ரன்னிலும், அபிஷேக் ஷர்மா 5 ரன்னிலும் முறையே முகமது ஷமி, யாஷ் தயாள் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த ராகுல் திரிபாதி (1 ரன்), கேப்டன் மார்க்ரம் (10 ரன்) ஆகியோரது விக்கெட்டையும முகமது ஷமி கைப்பற்றினார். சன்விர் சிங் 7 ரன்னில் அவுட் ஆனார். இதனால் அந்த அணி 6.1 ஓவர்களில் 45 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.

5-வது வீரராக களம் புகுந்த ஹென்ரிச் கிளாசென் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சித்தார். ஆனால் அவருக்கு யாரும் பக்கபலமாக நிற்கவில்லை. அவருடன் இணைந்த அப்துல் சமத் 4 ரன்னிலும், மார்கோ யான்சென் 3 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். நிலைத்து நின்று 35 பந்துகளில் 2-வது அரைசதத்தை கடந்த ஹென்ரிச் கிளாசென் 64 ரன்னில் (44 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) முகமது ஷமி பந்து வீச்சில் பவுண்டரி எல்லையில் டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்தார். சற்று நேரம் தாக்குப்பிடித்த புவனேஷ்வர் குமார் 27 ரன்னில் (26 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆனார்.

20 ஓவர்களில் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுக்கு 154 ரன்களே எடுத்தது. இதனால் குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மயங்க் மார்கண்டே 18 ரன்னுடனும், பசல்ஹக் பரூக்கி ஒரு ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். குஜராத் அணி தரப்பில் முகமது ஷமி, மொகித் ஷர்மா தலா 4 விக்கெட் சாய்த்தனர்.

13-வது ஆட்டத்தில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 9-வது வெற்றியை ருசித்து 18 புள்ளிகளுடன் முதல் அணியாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. 12-வது ஆட்டத்தில் ஆடி 8-வது தோல்வியை சந்தித்த ஐதராபாத் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிவுக்கு வந்தது. டெல்லி கேப்பிட்டல்சை அடுத்து ஐதராபாத் சன் ரைசர்ஸ் 2-வது அணியாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

Leave a Reply