லக்னோ அணி ‘திரில்’ வெற்றி!!

லக்னோ அணி ‘திரில்’ வெற்றி!!

லக்னோ,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் மொஷின் கான் சிறப்பாக பந்து வீசியதால் லக்னோ அணி ‘திரில்’ வெற்றி பெற்றது.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் லக்னோவில் நேற்றிரவு நடந்த 63-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.

‘டாஸ்’ ஜெயித்த மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. ‘கேட்ச்’ கண்டத்தில் இருந்து தப்பித்த தீபக் ஹூடா 5 ரன்னில் பெரன்டோர்ப் பந்து வீச்சில் டிம் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பிரேராக் மன்கட் முதல் பந்திலேயே ரன்னின்றி விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து ‘டக்-அவுட்’ ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக் 16 ரன்னில் பியுஷ் சாவ்லா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் சிக்கினார். இதனால் அந்த அணி 6.1 ஓவர்களில் 35 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த சூழலில் மார்கஸ் ஸ்டோனிஸ், கேப்டன் குருணல் பாண்ட்யாவுடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும், அதேநேரத்தில் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டியும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். 14 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை கடந்தது.

பொறுப்புடன் ஆடிய குருணல் பாண்ட்யா 49 ரன்னில் (42 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) இருக்கையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். இதைத்தொடர்ந்து நிகோலஸ் பூரன் களம் புகுந்தார். அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டோனிஸ் 42 ரன்கள் எடுத்து இருந்த போது ஆகாஷ் மாத்வால் பந்து வீச்சை காலில் வாங்கியதால் நடுவர் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் என்று கையை உயர்த்தினார். ஆனால் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்து சாதகமான முடிவை பெற்ற ஸ்டோனிஸ் தொடர்ந்து ஆடியதுடன் 36 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இந்த சீசனில் அவர் அடித்த 3-வது அரைசதம் இதுவாகும். ஜோர்டான் வீசிய ஒரு ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரி விளாசிய ஸ்டோனிஸ், பெரன்டோர்ப் பந்து வீச்சில் தொடர்ச்சியாக 2 சிக்சர் பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

178 ரன் இலக்கு

20 ஓவர்களில் லக்னோ அணி 3 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் 89 ரன்களுடனும் (47 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்சர்), நிகோலஸ் பூரன் 8 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மும்பை அணி தரப்பில் பெரன்டோர்ப் 2 விக்கெட்டும், பியுஷ் சாவ்லா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் வேகமாக மட்டையை சுழற்றி நல்ல அடித்தளம் அமைத்தனர். அணியின் ஸ்கோர் 90 ரன்னாக உயர்ந்த போது (9.4 ஓவர்) ரோகித் சர்மா (37 ரன்கள், 25 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) ரவி பிஷ்னோய் பந்து வீச்சை தூக்கி அடித்து பவுண்டரி எல்லையில் தீபக் ஹூடாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 3-வது அரைசதத்தை கடந்த இஷான் கிஷன் 59 ரன்னில் (39 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரவி பிஷ்னோய் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து சூர்யகுமார் யாதவ் (7 ரன்) ஸ்கூப் ஷாட் ஆட முயற்சித்து போல்டு ஆனார். அடுத்து நேஹல் வதேரா 16 ரன்னிலும், விஷ்ணு வினோத் 2 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இதைத்தொடர்ந்து கேமரூன் கிரீன், டிம் டேவிட்டுடன் ஜோடி சேர்ந்தார்.

லக்னோ ‘திரில்’ வெற்றி

கடைசி 2 ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவையாக இருந்தது. 19-வது ஓவரில் நவீன் உல்-ஹக் 2 சிக்சர் உள்பட 19 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் 11 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொஷின் கான் கட்டுக்கோப்பாக வீசி 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களே எடுத்தது. இதனால் லக்னோ அணி 5 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. டிம் டேவிட் 32 ரன்னுடனும் (19 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), கேமரூன் கிரீன் 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். லக்னோ அணி தரப்பில் ரவி பிஷ்னோய், யாஷ் தாக்குர் தலா 2 விக்கெட்டும், மொஷின் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

13-வது ஆட்டத்தில் ஆடிய லக்னோ அணி 7-வது வெற்றி பெற்று தனது அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. 6-வது தோல்வி கண்ட மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை வென்றாலும், அடுத்த சுற்றுக்கு முன்னேற மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டியது அவசியம்.

Leave a Reply