ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடைசி லீக் போட்டியில் களம் கண்ட பெங்களூரு அணி குஜராத்திடம் தோல்வி!!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடைசி லீக் போட்டியில் களம் கண்ட பெங்களூரு அணி குஜராத்திடம் தோல்வி!!

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடைசி லீக் போட்டியில் களம் கண்ட பெங்களூரு அணி குஜராத்திடம் தோற்றதன் மூலம் அந்த அணியின் அடுத்த சுற்று கனவு சிதைந்தது.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு சின்னசாமி ஸ்ேடடியத்தில் நேற்றிரவு நடந்த 70-வது மற்றும் கடைசி லீக்கில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் கோதாவில் குதித்தன. நீண்ட நேரம் பெய்த மழை காரணமாக ஆட்டம் 55 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. ஆனால் ஓவர் ஏதும் குறைக்கப்படவில்லை. ‘டாஸ்’ ஜெயித்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பெங்களூருவை பேட்டிங் செய்ய அழைத்தார்.

இதையடுத்து வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் வாய்ப்பு என்ற உச்சக்கட்ட நெருக்கடியுடன் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்சும், முன்னாள் கேப்டன் விராட் கோலியும் பெங்களூருவின் இன்னிங்சை தொடங்கினர். மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிகளாக தெறிக்கவிட்ட அவர்கள் உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். வலுவான அடித்தளம் அமைத்த இவர்கள் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 62 ரன்கள் சேகரித்தனர்.

பிளிஸ்சிஸ் 28 ரன்களில் நூர் அகமதுவின் சுழலில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் (11 ரன்), மஹிபால் லோம்ரோர் (1 ரன்), மைக்கேல் பிரேஸ்வெல் (26 ரன்) சீரான இடைவெளியில் பெவிலியன் திரும்பினர். தினேஷ் கார்த்திக் டக்-அவுட் ஆனார்.

கோலி சதம்

இதற்கு மத்தியில் நிலைத்து நின்று நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்திய கோலி கடைசி ஓவரில் செஞ்சுரி அடித்து அமர்க்களப்படுத்தினார். இந்த சீசனில் அவரது 2-வது சதம் இதுவாகும். கடந்த ஆட்டத்திலும் அவர் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்கு 197 ரன்கள் சேர்த்தது. கோலி 101 ரன்களுடனும் (61 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத் 23 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். குஜராத் தரப்பில் நூர் அகமது 2 விக்கெட்டும், முகமது ஷமி, யாஷ் தயாள், ரஷித்கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

கில் சதம்

அடுத்து 198 ரன்கள் இலக்கை நோக்கி குஜராத் அணி ஆடியது. விருத்திமான் சஹா 12 ரன்னில் வீழ்ந்தார். இதன் பின்னர் சுப்மன் கில்லும், மாற்று ஆட்டக்காரர் விஜய் சங்கரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். விஜய் சங்கர் 53 ரன்கள் எடுத்து வலுவூட்டினார். அவரைத் தொடர்ந்து வந்த ஷனகா (0), டேவிட் மில்லர் (6 ரன்) ஏமாற்றினர். ஆனாலும் மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலைகொண்டு சுழன்றடித்த சுப்மன் கில் தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான 20-வது ஓவரை வெய்ன் பர்னெல் வீசினார். முதல் 2 ரன்களை எக்ஸ்டிரா வகையில் விட்டுக்கொடுத்தார். இதையடுத்து மறுபடியும் வீசப்பட்ட முதல் பந்தை சுப்மன் கில் சிக்சருக்கு ஓடவிட்டு வியப்பூட்டினார். அத்துடன் சதத்தையும் கடந்தார். இந்த சீசனில் அவரது 2-வது சதம் இதுவாகும்.

குஜராத் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 10-வது வெற்றியாகும். கில் 104 ரன்களுடனும் (52 பந்து, 5 பவுண்டரி, 8 சிக்சர்), ராகுல் திவேதியா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

7-வது தோல்வியை தழுவிய பெங்களூரு அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கும் பெங்களூருவின்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தத்தில் கோலிக்கு இது 7-வது சதமாகும். இதன் மூலம் ஐ.பி.எல்.-ல் அதிக சதங்கள் அடித்தவரான கிறிஸ் கெய்லின் (6 சதம்) சாதனையை முறியடித்தார். இந்த சாதனை பட்டியலில் ராஜஸ்தான் ராயல் வீரர் ஜோஸ் பட்லர் (5 சதம்) 3-வது இடத்தில் உள்ளார்.

விராட் கோலி முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத்துக்கு எதிராக 100 ரன்கள் எடுத்திருந்தார். ஐ.பி.எல்.-ல் ஷிகர் தவான் (2020-ம் ஆண்டு), ஜோஸ் பட்லர் (2022-ம் ஆண்டு) ஆகியோருக்கு பிறகு அடுத்தடுத்து இரு சதங்கள் அடித்த வீரர் என்ற சிறப்பை கோலி பெறுகிறார்.

குஜராத் வீரர் சுப்மன் கில் 18-வது ஓவரில் பறக்கவிட்ட ஒரு சிக்சர் நடப்பு தொடரின் 1,063-வது சிக்சராக அமைந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்கள் இவை தான். இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் 1,062 சிக்சர் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

துக்கத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை

இந்த நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த நிலையில், பெங்களூரு அணி வெளியிட்டுள்ள உருக்கமாக டுவிட்டர் பதிவில், “நேற்றைய போட்டியில் இறுதிவரை இடைவிடாமல் போராடினோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. எல்லா நேரங்களிலும் எங்களை ஆதரிக்கும் ரசிகர்களுக்கு நன்றி. கோப்பையை நோக்கிய பயணம் முடிவுக்கு வந்தது வருத்தமளிக்கிறது. எங்கள் துக்கத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

இந்த சீசனில் ஒவ்வொரு உற்சாகத்திலும் சவாலிலும் எங்களுடன் நின்ற எங்கள் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். வானிலை அல்லது விளைவு எதுவாக இருந்தாலும், உங்கள் அசைக்க முடியாத ஆதரவு எங்களுக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. உங்கள் ஆர்வத்தையும் அன்பையும் எங்கள் இதயத்தில் சுமந்து செல்கிறோம். எங்களை நம்பியதற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குஜராத் – பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை மும்பை அணி வீரர்கள் டிவியில் பார்த்துள்ளனர். வெற்றிக்கான ரன்னை சுப்மன் கில் அடித்த போது மும்பை வீரர்கள் துள்ளி குதித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Leave a Reply