கஞ்சா ஆயில், கஞ்சா சாக்லெடை தொடர்ந்து கஞ்சா கேக் விற்பனை … வடமாநில நபர் கைது…

கஞ்சா ஆயில், கஞ்சா சாக்லெடை தொடர்ந்து கஞ்சா கேக் விற்பனை … வடமாநில நபர் கைது…

சென்னை

சென்னை நகரில் கஞ்சா ஆயில், கஞ்சா சாக்லெட் வரிசையில் தற்போது கஞ்சா கேக்கும் முதன்முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. கஞ்சா சாக்லெட்டுக்கு மாணவர்கள் – இளைஞர்கள் மத்தியில் சென்னையில் வரவேற்பு இருந்ததால் கஞ்சா கேக்கையும் தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளனர்.

பீகார், ஒடிசா, அசாம், திரிபுரா போன்ற மாநிலங்களில் இதனை தயாரித்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள். கஞ்சா கேக்கை போதை ஆசாமிகள் ‘கஞ்சா சாரஸ்’ என்று அழைக்கிறார்கள். இதை கூரியர் பார்சல் மூலமாக சென்னைக்கு கடத்தி வருவதாக மாம்பலம் போலீசாருக்கு ரகசியம் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் மாம்பலம் போலீசார் நேற்று முன்தினம் இரவில் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஒரு கடையில் சோதனை போட்டனர். அப்போது அங்கிருந்த கூரியர் பார்சல் ஒன்றை கைப்பற்றினார்கள். அதை திறந்து பார்த்தபோது, 200 கிராம் எடையுள்ள கஞ்சா கேக் இருந்தது. இது அதிக விலையுள்ளது என்று கூறப்படுகிறது.

இதை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கூரியர் பார்சலில் இதை கடத்தி வந்ததாக சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஏக்நாத் (வயது 39) என்பவர் கைது செய்யப்பட்டார்.

மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாரிடம் இதுபற்றி கேட்டபோது, சென்னைக்கு தற்போது தான் முதன்முதலாக விற்பனைக்கு வந்துள்ளது என்றும், வடமாநிலங்களில் இதை சர்வ சாதாராணமாக விற்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.

விருந்து நிகழ்ச்சிகளில் இதை பரிமாறுகிறார்கள் என்றும் தெரிவித்தனர். கஞ்சா சாக்லெட், கஞ்சா கேக் போன்ற போதை பொருட்களை தடை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி ஆந்திரா, பீகார், ஒடிசா, அரியானா, திரிபுரா ஆகிய மாநில டி.ஜி.பி.க்களுக்கு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கடிதம் எழுதியுள்ளார்.


Leave a Reply