IPL CRICKET ; 10வது முறையாக ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

IPL CRICKET ; 10வது முறையாக ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

சென்னை;

இந்தியாவில் நடைபெற்று வரும் 16வது ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடருக்கான முதலாவது தகுதி சுற்று (குவாலிஃபயர் -1) ஆட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறியது.

இதில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் – 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 60 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் டெவோன் கான்வே 34 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் முகமது ஷமி மற்றும் மோகித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய குஜராத் அணியின் பேட்டிங் வரிசை தடுமாறியது. அடுத்தடுத்த விக்கெட் இழப்புகளால் ரன்கள் சேர்க்கவும் போராடினர். அதிகபட்சமாக ஷுப்மான் கில் 38 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்சர் உட்பட 42 ரன்களும், ஆல்-ரவுண்டர் ரஷித் கான் 16 பந்துகளில் 30 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில், 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணியினர் 157 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி 10வது முறையாக ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

சென்னை அணி தரப்பில் தீபக்  சாஹர், மகேஷ் தீக்ஷனா, ரவீந்திர ஜடேஜா, மதீஷா பத்திரனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில், குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அதன் கேப்டன் எம்.எஸ் தோனிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

Leave a Reply