IT RAID; டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரர் வீட்டிலிருந்து ரூ.2 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்…

ஈரோடு;
தமிழகத்தில் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களிலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் உள்பட நெருக்கமானவர்கள் வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று காலை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை, இரவு மூழுவதும் நீடித்து இன்று 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன்படி கோவையில் 7 இடங்களிலும், திருச்சி, ஈரோடு உள்பட தமிழகம் முழுவதும் ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் ஈரோடு திண்டலை அடுத்துள்ள சக்தி நகர் மூன்றாவது வீதியில் வசிக்கும், சச்சிதானந்தம் என்கிற டாஸ்மார்க் வாகன ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது அவருடைய வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்கள் மற்றும் 2 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் வெண்கோடுபள்ளம் என்கிற இடத்தில் இருக்கக்கூடிய அவரது அலுவலகத்திலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால் மேலும் ரொக்க பணங்களோ அல்லது ஆவணங்களோ கைப்பற்ற படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.