செல்பி எடுக்கும்போது அணையில் தவறிவிழுந்த மொபைல் போனை எடுக்க 21 லட்ச லிட்டர் நீரை வீணாக்கிய அரசு அதிகாரி… நாடெங்கும் குவியும் கண்டனங்கள்…

டெல்லி:
சத்தீஸ்கர் மாநிலம் காங்கேர் மாவட்டத்தில் உள்ள கோயிலிபேடா பிளாக். அங்கே உணவு பாதுகாப்பு அதிகாரியான ராஜேஷ் விஸ்வாஸ் என்பவர் தனது விடுமுறையைக் கழிக்க கெர்கட்டா அணைக்குச் சென்றுள்ளார்.
அப்போது செல்பி எடுக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக அவரது ஒரு லட்சம் மதிப்பிலான மொபைல் நீரில் விழுந்துவிட்டது. அந்த நீர்த் தேக்கம் 15 அடி ஆழம் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து மொபைலை எடுக்க உள்ளூர் மக்களின் உதவியை அவர் கேட்டுள்ளார்.
அவர்கள் முயன்ற போதிலும், மொபைலை எடுக்க முடியவில்லை. இதையடுத்து இரண்டு பம்புகள் மூலம் அடுத்த 3 நாட்களுக்கு அங்கே இருந்த 21 லட்சம் லிட்டர் நீரை அவர் வீணாக்கியுள்ளார். இந்த நீர் மூலம் 1,500 ஏக்கர் நிலத்திற்குப் பாசனம் செய்திருக்க முடியும்.
திங்கள்கிழமை முதல் அவர் நீரை வெளியேற்றியுள்ளார். நேற்று தான் அவர் முழுமையாக நீரை வெளியற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நீர்ப்பாசன அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து இந்த அராஜகத்தை நிறுத்தியுள்ளார்.
இருப்பினும், அதற்குள் அணையில் இருந்த நீர் ஆறு அடிக்குக் குறைந்துவிட்டதாம். சுமார் 21 லட்சம் லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இவ்வளவு கஷ்டப்பட்டு நீரை வெளியேற்றி ஒரு வழியாக மொபைலை எடுத்துவிட்டனர். இருப்பினும், அந்த ஆழத்தில் 3 நாட்கள் இருந்ததால் மொபைல் வேலை செய்யவில்லையாம்.
இந்தச் சம்பவம் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்மந்தப்பட்ட அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றே சத்தீஸ்கர் அமைச்சரும் தெரிவித்துள்ளார்.