அடாவடி வசூலில் ஈடுபடும் கரூர் குரூப் மீது நடவடிக்கை எடுங்கள்.. இல்லையேல் தமிழகமெங்கும் போராட்டம் நடத்துவோம்… டாஸ்மாக் சங்கங்கள் ஆவேச கடிதம்…

அடாவடி வசூலில் ஈடுபடும் கரூர் குரூப் மீது நடவடிக்கை எடுங்கள்.. இல்லையேல் தமிழகமெங்கும் போராட்டம் நடத்துவோம்… டாஸ்மாக் சங்கங்கள் ஆவேச கடிதம்…

சென்னை:

‘கரூர் குரூப்’ என்ற பெயரில் டாஸ்மாக் ஊழியர்களிடம் அராஜகமாகப் பணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்கள் கடிதம் அனுப்பி இருக்கின்றன.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

 மத்திய சென்னை மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரூர் குரூப்’ என சொல்லிக் கொண்டு மனோகர், சம்பத் மற்றும் ஷியாம் ஆகியோர் நேரில் வந்தும் , தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ரூ.50 ஆயிரம், ரூ.45 ஆயிரம் எனக் கடைகளின் விற்பனைக்கு ஏற்றார்போல் பணம் தர வற்புறுத்துகிறார்கள். மாவட்ட மேலாளர் கூறியதாலேயே கடைகளில் வசூலிப்பதாகவும் சொல்கிறார்கள்.

இவர்கள் யார், எதற்கு கடையிலிருந்து பணம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டால் பணம்கொடுக்காத கடைப் பணியாளர்களை சோதனையில் சிக்க வைத்து பணிநீக்கம் செய்ய வைப்போம் என மிரட்டுகிறார்கள். இவ்வாறு அதிகாரிகளைக் காட்டி, மிரட்டி வசூலில் ஈடுபடும் கரூர் குரூப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன பொதுச் செயலாளர் திருச்செல்வன் இது பற்றி கூறுகையில் , கரூர் குரூப் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. இதில் தனக்குத் தொடர்பில்லை என அமைச்சர் சொல்கிறார்.

அப்படியானால் இந்தளவுக்குச் செயல்பட அந்த நபர்களுக்கு யார் துணிச்சல் தருகிறார்கள். இதற்கு சில தொழிற்சங்கங்களும் உடந்தையாக இருக்கின்றன.

இது போதாது என மாவட்ட மேலாளர்கள் நடத்தும் கூட்டத்திலும் கரூர் குரூப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என சில மாவட்ட மேலாளர்களே கூறுகிறார்கள். இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய டாஸ்மாக் இயக்குநர் குழுவும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

இவற்றைக் கண்டித்து வரும் 20-ம் தேதி மண்டல அளவில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த போகிறோம்” இவ்வாறு கூறினார். தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு குவாட்டர் பாட்டிலுக்கும் 10 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் உள்ளது.

டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதற்கு கரூர் குரூப் தான் காரணம் என சில டாஸ்மாக் ஊழியர்கள் வீடியோக்களில் கூறுவதும் அவ்வப்போது நடந்தது.

இதற்கு அண்மையில் பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் குரூப் என்று கூறப்படும் விவகாரத்திற்கும் தனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றார். மேலும் 10 ரூபாய் அதிகமாக வசூலிக்கும் கடைகளின் எண், ஊழியரின் பெயரை கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

எல்லா கடைகளிலும் 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக செய்தியாளர்கள் கூறி புகாரையும் அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்தார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது .

Leave a Reply