நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மாதுளம்பழம் !!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மாதுளம்பழம் !!

மாதுளை என்ற சொல்லுக்கு பல விதைகள் கொண்ட ஆப்பிள் என்று பொருள். ஒரு மாதுளையில் 1000க்கும் மேற்பட்ட விதைகள் இருக்கும். மாதுளை மத்திய கிழக்கு நாடுகளை தாயகமாகக் கொண்டது. மாதுளை பெர்ரி குடும்பத்தைச் சேர்ந்தது. மாதுளை ஒரு சூப்பர் பழமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மாதுளை மரங்கள் வெப்பமான மற்றும் வறண்ட காலநிலையில் வளரும் தன்மை கொண்டது.

மாதுளை மரங்கள் 200 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. மாதுளை இப்போதுள்ள ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் வழியாக வட இந்தியா வந்தது என சொல்லப்படுகிறது. இன்று இது மத்திய கிழக்கு மற்றும் காகசஸ் பகுதி, வடக்கு மற்றும் வெப்பமண்டல ஆப்பிரிக்கா, தெற்காசியா, மத்திய ஆசியா, தென்கிழக்கு ஆசியாவின் வறண்ட பகுதிகள் மற்றும் மத்தியதரைக் கடலின் சில பகுதிகள் முழுவதும் பரவலாக பயிரிடப்படுகிறது.

மாதுளையில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது. ஆனால் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் உள்ளது. இதில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியம், சிறுநீர் ஆரோக்கியம், உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

சராசரியான 282 கிராம் மாதுளை பழத்தில் 234 கலோரிகள், 4.7 கிராம் புரதம், 3.3 கிராம் கொழுப்பு, 51 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 38.6 கிராம் சர்க்கரை, 15.3 கிராம் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் சி, போலேட் இப்படி பல ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது.

தொடர்ந்து மாதுளையை சாப்பிட்டு வரும்பொழுது அது உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இது டைப் டூ நீரிழிவு நோயை எதிர்த்து போராடுகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. செரிமானத்தை சீராக்கி, சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது.

மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால் முன்கூட்டியே முதுமைக்கு காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து நம்முடைய உடலைப் பாதுகாக்கிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் சூரிய ஒளி மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுகள் காரணமாக உருவாகின்றன. மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தை மெல்லியதாக மாற்ற உதவுகிறது.

மாதுளையின் விதைகள் இரத்த தட்டுக்கள் உறைவதையும் தடுக்கிறது. இரண்டு வகையான இரத்தக் கட்டிகள் உள்ளன. முதலாவதாக வெட்டு அல்லது காயத்தின் போது ஏற்படும் இரத்த கட்டிகள். இந்த இரத்த கட்டிகள் இரத்தம் வெளியேறாமல் பாதுகாக்கிறது. இரண்டாவதாக இதயம், தமனிகள் அல்லது உடலின் வேறு எங்கும் ஏதேனும் உள் உறைவு ஏற்படுவது.

இந்த வகை கட்டிகள் நல்லதல்ல. நம்முடைய உயிருக்கும் ஆபத்தானவை. அதிகரித்து வரும் வயது மற்றும் நாம் வாழும் வாழ்க்கை முறை, கொலஸ்ட்ரால் காரணமாக நமது தமனிகளின் சுவர்கள் கடினமாகி சில நேரங்களில் அடைப்புகளை ஏற்படுத்தும். மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை கெட்ட கொலஸ்ட்ராலை ஆக்சிஜனேற்றம் செய்யாமல் தடுக்கிறது.

எனவே மாதுளை சாப்பிடுவது அதிகப்படியான கொழுப்பை நீக்குகிறது மற்றும் தமனி சுவர்கள் கடினமாவதைத் தடுக்கிறது. மாதுளை நமது இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவை வேகமாக கொண்டு செல்ல உதவுகிறது. மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, கொழுப்பைக் குறைத்து, ரத்தம் உறைவதைத் தடுக்கிறது.

இவை அனைத்தும் இறுதியில் இரத்தம் எளிதாக ஓட உதவுகிறது. இதனால் உங்கள் உடலில் ஆக்ஸிஜனின் அளவை மேம்படுத்துகிறது. இதய நோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது மாதுளை. புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் மாதுளை சாறுக்கு இருப்பதாக இரண்டு ஆய்வுகள் கூறுகின்றன.

ஒரு பரிசோதனையில் மாதுளை சாறு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைத்து புற்றுநோய் செல்களை அழித்தது தெரியவந்துள்ளது. பியூனிசிக் அமிலம் மாதுளையில் உள்ள முக்கிய கூறுகளில் ஒன்றாகும். இது கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைடுகள் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

மாதுளையில் அழற்சி எதிர்ப்பு கலவைகள் நிறைந்துள்ளதால் முடக்கு வாதம் மற்றும் ஆஸ்டிரோஆர்த்ரிட்ஸ் போன்ற நோயெதிர்ப்பு தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதுளை மிகவும் ஆரோக்கியமானது. அவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது ஆன்டிபாடி உற்பத்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கவும், பொதுவான நோய்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்கவும் மாதுளை உதவுகிறது. மாதுளையில் உள்ள ஹைட்ரோஆல்கஹாலிக் சாறு நுண்ணுயிரிகளின் காரணமாக பற்களில் படலம் உருவாவதை கிட்டத்தட்ட 84 சதவீதம் குறைக்கிறது என்று ஒரு ஆய்வு சொல்கிறது. பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட பல ஆய்வுகள் மாதுளையை தவறாமல் சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று சொல்கிறது.

Leave a Reply