உடல் பருமனை குறைக்க உதவும் ”நீச்சல் பயிற்சி”!!

உடல் பருமனை குறைக்க உதவும் ”நீச்சல் பயிற்சி”!!

உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் செயல்பட வைக்கும் பயிற்சி நீச்சல் ஆகும். எல்லா வயது பெண்களும் நீச்சலை கற்றுக் கொள்ளலாம். வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என அனைவரும் செய்யக் கூடிய பயிற்சிகளில் நீச்சல் பிரதானமாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு ஐந்து வயதில் நீச்சல் கற்றுத்தர ஆரம்பிக்கலாம். சிறு வயதில் இருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் வலுவாகவும், ஆரோக்கியம் சீராகவும் இருக்கும்.

உடல் பருமனை குறைக்க உதவும் பயிற்சிகளில் நீச்சல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சராசரியாக ஒரு மணி நேரம் பெண்கள் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும்போது, அவர்களது உடலில் 400 கிலோ கலோரி எரிக்கப்படுவதாக ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. இதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து எடை சீராகிறது. தினமும் நீச்சல் பயிற்சி செய்பவர்களுக்கு, வயிற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினை படிப்படியாக குறையும்.

மெனோபாஸ் காலங்களில் உடல் சோர்வு, வெறுப்பு, எதிலும் ஈடுபாடு ஏற்படாத மனநிலை, கவலை போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும். அந்த சிக்கல்களுக்கு சிறந்த தீர்வாக நீச்சல் பயிற்சி அமைகிறது. தினமும், அரைமணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்வதால் மனம் லேசாகிறது. நீந்தும்போது மனச்சிதறல் நீங்கி, மனம் ஒருநிலை அடைந்து, அமைதி ஏற்படும். அதன் மூலம் இரவில் ஆழ்ந்த உறக்கம் கண்களை தழுவும்.

நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சினைகள் மற்றும் மாதவிலக்கு கோளாறுகள் சீராவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பிரசவத்துக்கு தயாராகும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நீச்சல் பயிற்சி செய்வதன் மூலம் பிரசவ கால நெருக்கடிகள் அகன்று, சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது.

நீச்சல் நல்ல மூச்சுப்பயிற்சியாக அமைகிறது. அதன் மூலம் நுரையீரல் வலுப்பெற்று சுவாச பிரச்சினைகள் நீங்குவதுடன், மன அழுத்தமும் குறைகிறது. நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும்போது இதயம் சீராக இயங்குவதால், ரத்த ஓட்டமும் சீராகும். அதன் மூலம் முதுகு, மூட்டுகள், தண்டுவடம் ஆகியவை வலுவாகின்றன.

நீச்சல் பயிற்சி காரணமாக குடல் இயக்கம் சீரடைவதால், செரிமான சக்தி தூண்டப்பட்டு, அஜீரண கோளாறு அகலும். பசியைத் தூண்டச் செய்வதுடன், மலச்சிக்கல் பிரச்சினையும் நீங்கும்.

Leave a Reply