அடுத்து படம் நடித்தால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடிப்பேன் – உதயநிதி ஸ்டாலின் பேச்சு !!

அடுத்து படம் நடித்தால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடிப்பேன் – உதயநிதி ஸ்டாலின் பேச்சு !!

சென்னை:

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராசா கண்ணு’ மற்றும் ‘ஜிகு ஜிகு ரெயில்’ பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தது. ‘மாமன்னன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது.

இந்நிலையில், அடுத்து படம் நடித்தால் உங்களுடன் தான் நடிப்பேன் என மாரி செல்வராஜிடம் வாக்குறுதி கொடுத்துள்ளேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதன்முறையாக நடிக்கிறேன். சொல்லப்போனால் இது என்னுடைய கடைசி படம். வடிவேலு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரிய குழுவுடன் இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி.

மாரி செல்வராஜ் படங்களில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்களோ அது இந்தப் படத்திலும் இருக்கிறது. படத்தை ஜூன் 29-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம்.

கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. அமைச்சர் பொறுப்பு கொடுத்த பின்பும் நான் போய் படங்களில் நடித்து வந்தால் அது சரியாக இருக்காது. நிறைய வேலைகள் இருக்கிறது. பணிகள் இருக்கிறது. எதிர்பார்ப்பு கூடிக்கொண்டேயிருக்கிறது. பல்வேறு பணிச் சுமைகளுக்கு இடையே தான் படத்தின் டப்பிங், இசை வெளியீட்டு விழாவுக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறேன்.

எனக்கு தெரிந்து இதுதான் கடைசி படமாக இருக்கும். நல்ல படமாக அமைந்தது திருப்தி. நானும் மாரி செல்வராஜும் நிறைய பேசினோம். மாரி செல்வராஜின் அரசியல் இந்தப் படத்தில் அதிகமாக உள்ளது. அவருக்கும் எனக்குமான புரிதல் அதிகரித்துள்ளது. அவரே கூட என்னிடம் அடுத்து நீங்கள் படம் நடித்தால் என் இயக்கத்தில் தான் நடிக்க வேண்டும் என்றார். அடுத்த 3 வருடத்திற்கு படம் கிடையாது.

அதற்கு பின்பு தெரியவில்லை. அதை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். நானும் மாரியிடம் அடுத்து படம் நடித்தால் உங்களுடன் தான் நடிப்பேன் என வாக்குறுதி கொடுத்துள்ளேன் என தெரிவித்தார்.

Leave a Reply