தமிழக அரசால் முடியவில்லை என்றால்,மேகதாது அணை கட்டுவதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை !!

தமிழக அரசால் முடியவில்லை என்றால், மேகேதாட்டு அணை கட்டுவதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
காவேரி நதிநீர் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகவும், தமிழ் நாட்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
சமீபத்தில், கர்நாடக மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசின் துணை முதலமைச்சர் திரு. டி.கே. சிவக்குமார் கடந்த 30.5.2023 அன்று நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்ட 9,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இவரது செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரான சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். ஆனால் அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை. நாங்கள் மேகதாது அணை கட்ட சம்மதிக்க மாட்டோம் என்று கூறினார்.
இந்நிலையில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை திமுக அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றால் நாங்கள் தடுத்து நிறுத்துவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசால் முடியவில்லை என்றால், மேகேதாட்டு அணை கட்டுவதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்.
அதற்கான திறமை எங்களிடம் உள்ளது. இதற்காக மேகதாட்டு நோக்கி தமிழக பாஜக சார்பில் நடைபயணம் கூட நடத்த தயாராக இருக்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.