சென்னை கலைவாணர் அரங்கில் கலைஞர் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!!

ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரும், 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப் பவராகவும் திகழ்ந்த நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் என்றென்றும் நினைவில் போற்றும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசால் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 22.5.2023 அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலைவாணர் அரங்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் திரு. கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இப்புகைப்படக் கண்காட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள், அவற்றால் மக்கள் பெற்ற பயன்கள், இளமை காலம் முதல் அவர் மேற்கொண்ட அரசியல் பயணம், பல்வேறு அரசியல் மற்றும் முக்கிய தலைவர்களுடனான சந்திப்புகள் போன்றவை குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்புகைப்படக் கண்காட்சி ஜுன் மாதம் முழுவதும் மக்கள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி , உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் , இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.