ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்!!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்!!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துப் பேசினார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் டெல்லி அரசுக்கே அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆளுநர் மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு முன்பாகவே , அந்த அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு, அதிகாரிகள் நியமனம் தொடர்பாக அவசர சட்டம் ஒன்றை கொண்டுவந்தது. அதில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மத்திய அரசின் இந்த அவசர சட்டத்திற்கு டெல்லி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மீண்டும் டெல்லி அரசு வழக்கு தொடுத்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். ஏற்கனவே பீஹார் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே , காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, டெல்லி முதல்வர் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த மான் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினை மாலை 4.30 மணிக்கு சந்தித்த அவர்கள், மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு கோரினர். அதன்பின்னர் இரவு 7 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சென்றனர். இந்நிலையில் இன்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து ஆதரவு கோரினார்.

Leave a Reply