போதை தலைக்கேறிய நிலையில் அரை நிர்வாணத்துடன் ரோட்டில் வரும் வாகனங்களை மறித்து அடாவடி செய்த இளைஞர்…

பொள்ளாச்சி ;
பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவை சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் முன்பு திடீரென தலையில் ரத்த காயத்துடன், உடல் முழுவதும் ரத்தக்கரை படிந்த நிலையில் அரை நிர்வாணத்துடன் வந்த போதை ஆசாமி சாலை நடுவே நின்று கொண்டு வாகனங்களை வழிமறித்தும், வாகன ஓட்டிகளுக்கும் மிரட்டல் விடுத்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது
பின்னர் அந்த போதை ஆசாமி அங்கிருந்து நீதிமன்ற வளாகத்திற்குள் சென்று வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அவரை வெளியில் செல்லுமாறு கூறினார்.
ஆனால் அந்த போதை ஆசாமி ஊழியர்களை மிரட்டி நான் நீதிபதி அம்மாவை பார்க்க வேண்டும் வெளியில் வரச் சொல்லுங்கள் என்று மிரட்டும் தொணியில் பேசியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து நீதிபதியை பார்க்க வேண்டும் எனக் கூறி ரகளையில் ஈடுபட்டார். மேலும் அங்கு வந்த காவல் துறையினருக்கும் மிரட்டல் விடுத்தார்.
ஒரு வழியாக போலீசார் அவரை வெளியே அழைத்து வந்தனர்.
பின்னர், அந்த நபரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி வயது 22 என்பதும் தனக்குத்தானே பாட்டிலால் தலையை காயத்தை ஏற்படுத்தியதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.