கற்களை வீசி தாக்கும் நவீன ஆயுதத்தால் பாகுபலி யானையை தாக்கிய நபர்…..  கைது செய்த கோவை வனத்துறையினர்…

கற்களை வீசி தாக்கும் நவீன ஆயுதத்தால் பாகுபலி யானையை தாக்கிய நபர்…..  கைது செய்த கோவை வனத்துறையினர்…

கோவை;

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது.

மாத கணக்கில் ஒரே பகுதிகளில் சாதாணமாக உலா வந்தபடி இருக்கும். இதன் பிரமாண்ட உருவம் காரணமாக பாகுபலி என்றழைக்கப்படும் இந்த யானையை மூன்று கும்கி யானைகளின் உதவியுடன் பிடிக்க வனத்துறையினர் முயன்றும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

ஆண்டுக்கணக்கில் மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றி வந்தாலும் இதுவரை இந்த யானை யாரையும் தாக்கவோ அல்லது அச்சுறுத்தவோ கூட செய்யாமல் வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை உண்டு விட்டு சென்று விடும்.

தன்னை துன்புறுத்தி விரட்ட முயல்பவர்களை கூட பாகுபலி யானை தாக்க முற்படாமல் கடந்து செல்வது இதன் இயல்பு.

ஆனால் இதனை பயன்படுத்தி ஊருக்குள் நுழையும் பாகுபலி மீது அண்மைக்காலமாக தாறுமாறாக தாக்குதல் நடத்தப்பட்டு வருவது வன உயிரின ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே பாகுபலி மீது ஏராளமான ராக்கெட் வெடிகள் கண்மூடித்தனமாக வீசப்பட்டிருந்தது. அதற்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே யானைகள் மீது பட்டாசுகளை வீசுவது தடை செய்யப்பட்டது.

ஆனால் தற்போது மீண்டும் ராக்கெட் வெடி பட்டாசுகள் பயன்படுத்தப்படுவதோடு புதிதாக கனமான பிளாஸ்டிக் குழாய்களால் செய்யப்பட்ட கருவியை துப்பாக்கிபோல் சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.

இரு பாகங்களாக பிரிக்கப்பட்டு குழாயின் உள்பக்கம் பிளாஸ்டிக் காகிதத்தை வைத்து அதனுள் எளிதில் பற்றி கொள்ளும் ஸ்பிரிட் தெளித்து பின்னர் குழாயின் பின்பக்கம் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள கேஸ் அடுப்பை பற்ற வைக்க பயன்படுத்தும் லைட்டரை அழுத்தினால் தீப்பிழப்புடன் பலத்த சப்தம் கேட்கும்.

இந்த குழாயினுள் தற்போது கற்களை போட்டு பாகுபலி யானையை நோக்கி அடிப்பதாக புகார் எழுந்தது. இதில் இருந்து வேகமாக வெளியேறும் கற்கள் யானையை பலமாக தாக்கி காயப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதுபோன்ற அத்துமீறல்கள் அமைதியான இயல்புடைய பாகுபலி யானையை மூர்க்கத்தனமாக்கி விடும் என வன உயிரின ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்தபடி இருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று நெல்லித்துறை பகுதிக்கு பாகுபலி யானை வந்துள்ளது. இதையடுத்து அதேப்பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் நவீன குழாய் கற்களை வீசி யானையை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் குழாய் கருவியுடன் ஜெகநாதனை மடக்கி பிடித்து வனத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் பயன்படுத்திய பிளாஸ்டிக் குழாய் கருவியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply