பெண் குழந்தை பிறந்தவுடன் வங்கி கணக்கில் ரூ.50,000 டெபாசிட் திட்டம் விரைவில் அமல் – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!!

பெண் குழந்தை பிறந்தவுடன் வங்கி கணக்கில் ரூ.50,000 டெபாசிட் திட்டம் விரைவில் அமல் – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!!

பெண் குழந்தை பிறந்தவுடன் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டம், எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் ஆகிய திட்டங்களை புதுச்சேரியில் விரைவில் செயல்படுத்த உள்ளோம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி நகர வளர்ச்சி குழுமம் மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான வங்கிகளின் குழுமம் சார்பில் பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிர்பர் நிதி கடன் முகாம் இன்று கம்பன் கலையரங்கில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் தலைமை தாங்கினார். அனிபால் கென்னடி எம்எல்ஏ முன்னிலை வகித்தார். மாநில அளவிலான வங்கியாளர்கள் குழும தலைவர் குமார் துரை வரவேற்றார். இம்முகாமை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்து சாலையோர கடை வியாபாரிகளுக்கு கடனுதவிக்கான ஆணையை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ரங்கசாமி, “ ஏழை- எளிய மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்று நிறைய திட்டங்களை பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளார். அதில் ஒன்று பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிர்பர் நிதி திட்டம். சாலையோர கடை வியாபாரிகளுக்கு ஆரம்பத்தில் சிறிய முதலீடு தேவைப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை. இதனை பிரதமர் உணர்ந்துதான் வங்கிகள் மூலம் இந்த கடனுதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். புதுச்சேரியில் நிறைய சாலையோர கடைகளில் வியாபாரம் நடக்கிறது.

சாலையில் செல்வோருக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமலும் வியாபாரம் செய்ய வேண்டும். புதுச்சேரியில் கடந்த முறை 1,567 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் 608 பேர் தான் சரியாக கடனை செலுத்தி, 2வது முறையாக ரூ.20 ஆயிரம் கடனுதவி பெற்றுள்ளனர். வாங்கிய கடனை சரியாக திருப்பி செலுத்த வேண்டும். அப்போதுதான் மேலும், மேலும் வங்கியில் கடனுதவி பெற்று வியாபாரத்தை உயர்த்திக் கொள்ள முடியும். வங்கியில் கடன் வாங்குவதற்காக ஒருவர் 6 மாதம் சென்று வரக்கூடிய சூழல் இருந்தால், அவர் கடன் வாங்கும் எண்ணத்தையே விட்டு விடுவார். அதன்பிறகு, வாடிக்கையாளர்கள் வருவது குறைந்துவிடும். எனவே, வங்கிகள் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வகையில் ஒரே சமயத்தில் அனைத்து ஆவணங்களையும் பெற்று கடனை கொடுக்க வேண்டும்.

புதுச்சேரி அரசு பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குடும்ப தலைவிக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். சுமார் 70 ஆயிரம் குடும்பத்தலைவிகளுக்கு உதவித்தொகை கிடைக்கின்ற நிலையில் இத்திட்டம் செயல்படவுள்ளது. பெண் குழந்தை பிறந்தவுடன் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டம், எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் ஆகிய திட்டங்களை விரைவில் செயல்படுத்த உள்ளோம். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியாக ரூ.66 கோடி ஆரம்பத்திலேயே ஒதுக்கி கொடுத்துள்ளோம். உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதிலும் அரசு கவனமாக செயலாற்றி வருகிறது” என்றார்.

Leave a Reply