100 நாள் வேலை திட்டத்தில் பல லட்சம் மோசடி செய்ததாக காங். ஊராட்சி தலைவர் மீது 6 பிரிவுகளில் வழக்கு… கோவையில் பரபரப்பு…

100 நாள் வேலை திட்டத்தில் பல லட்சம் மோசடி செய்ததாக காங். ஊராட்சி தலைவர் மீது 6 பிரிவுகளில் வழக்கு… கோவையில் பரபரப்பு…

கோவை:

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGA) கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இது ஆண்டுக்கு மக்களுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதம் அளிப்பதால் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பூர்ணிமா( 40). இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

பஞ்சாயத்து தலைவர் பூர்ணிமா, தனியார் நிறுவன ஊழியர்கள், நில உரிமையாளர்கள் உள்பட தகுதியற்ற நபர்களுக்கு நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.

மொத்தம் வழங்கிய 1878 வேலை அட்டைகளில் 319 அட்டை தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும். அவர்களில் பலர் தனியார் நிறுவன ஊழியர்கள்; ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் அட்டை பெற்றுள்ளதாகவும் அப்பகுதி பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

40 ஆண்டுக்கு முன் இறந்தவர் பெயரிலும் அட்டை தரப்பட்டுள்ளதாகவும் இப்படி மோசடி செய்ததால் அரசிற்கு பல லட்ச ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கும், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கும் அடுத்தடுத்து புகார்கள் பறந்தன.

இதன் அடிப்படையில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலைவாய்ப்பு பெற்ற பயனாளிகள் அனைவரது பட்டியலையும் சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதனை தொடர்ந்து மருதூர் ஊராட்சி தலைவர் பூர்ணிமா மீது குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்ததையடுத்து ஆறு பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவினர் பூர்ணிமா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஊராட்சி மன்ற தலைவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பது கோவை மாவட்டத்தில் மற்ற ஊராட்சி தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Reply