பதற்றம் தவிர்…பதற்றம் குறித்து மகான் யோகானந்தர் தரும் விளக்கம்…

பதற்றம் தவிர்…பதற்றம் குறித்து மகான் யோகானந்தர் தரும் விளக்கம்…

கோவை:

‘பதறாத காரியம் சிதறாது’ என்பது முன்னோர் வாக்கு. பதற்றம் குறித்து மகான் யோகானந்தர் தனது ஆன்ம அனுபூதிக்கான பயணம் என்ற நூலில் தெளிவுபட விளக்கியுள்ளார்.

பதற்றம் (Nervousness) பற்றிய அவரது சிந்தனைகள் சிலவற்றை  இங்கு காண்போம்.

பதற்றம் நாகரீகத்தினால் விளையும் ஒரு நோய் ஆகும். ஆசையும், பாசமும் பதற்றம் என்ற நோய்க்கு உணவளிக்கின்றன. தேவையற்ற தேவைகள் கூடும்போது அமைதி அங்கே விடை பெறுகின்றது. பதற்றம் ஆங்கே நிலைபெறுகின்றது.

மித மிஞ்சிய பேச்சு, கனிவற்ற பேச்சு, வம்பளத்தல் ஆகியவை பதற்றத்திற்கு வித்திடுகின்றன. சண்டைக்கோழியாக இருப்போரைப் பதற்றம் எளிதில் பற்றிக் கொள்கின்றது.

பதற்றம் அடைவதால் பல கேடுகள் விளைகின்றன. பதற்றம் உணர்வு நிலையை உடலோடு பிணைக்கிறது. அமைதியின்மை, உணர்ச்சி கொந்தளிப்பு, மித மிஞ்சிய மனக்கிளர்ச்சியினால், பதற்றம் பெருகுகிறது. நரம்புகளில் கூடுதலான மின் அழுத்தத்தை ஏற்படுத்தி அவைகளை நலிவுறச் செய்கின்றன.

பயம், கோபம், பேராசை, பொறாமை போன்ற பேரழிவை ஏற்படுத்தும் உணர்ச்சிகள் பதற்றத்தைப் பெருக்கி நரம்புகளை நலம் இழக்கச் செய்கின்றன.நரம்புகள் கோனுகின்றன. புலன்களைத் தவறாகப்  பயன்படுத்தினால் நரம்பு சக்தி விரயமாகும். மித மிஞ்சி உண்பது, வரைமுறையற்ற உடலுறவு, மது அருந்துவது, போதைப் பொருட்களுக்கு அடிமை ஆவது ஆகியவை போலி இன்பம் மட்டுமே பயக்கும்.

இனிப் பதற்றத்தைத்  தணிக்கவும், தவிர்க்கவும், நரம்புகள் கோணாது தடுக்கவும் மகான் யோகானந்தர் அருளியுள்ள வழிமுறைகள்பற்றித் அறிந்து கொள்வோமா?

√வாய் சண்டையில் ஈடுபட வேண்டாம்.
√மௌனம் கலக நாசம் என்பதால்
கோபம் தணியும் வரை அமைதி காத்தல் வேண்டும்.
√உங்கள் அமைதியைப்  பிறர் பறித்துக்
கொள்ள அனுமதிக்கக் கூடாது.
√தகாத பேச்சினால் பிறர்‌ அமைதியைக்
குலைத்தல் தகாது.
√கோபத்தில் சொற்களைக் கொட்டி
விட்டுப் பின்னர் ஏன் அவ்வாறு
பேசினோம் என வருந்துதல் தவறு.
✓பதற்றவாதிகளோடு நெருக்கமாகக் கலந்து பழகுவதைத் தவிர்த்தல் நன்று.
√மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமை
ஆகக் கூடாது.
√மாட்டு இறைச்சி மற்றும் பன்றிஇறைச்சி கூடுதலாக மனக்கிளர்ச்சி
ஊட்டுபவை என்பதால் அவைகளை
உண்ண வேண்டாம்.
√மிகவும் பதற்றமாக இருக்கும் பொழுது
குளிர்ந்த நீரில் குளிக்கலாம் அல்லது
ஒரு பெரிய பனிக்கட்டி துண்டுகொண்டு தோல் முழுவதும்
தேய்க்கலாம்.
√ஒரு குவளை நீரில் எலுமிச்சைச் சாற்றையும், நொறுக்கப்பட்ட கற்கண்டையும்; இனிப்பும், புளிப்பும் சமமாக இருக்கும் படி சேர்த்து அருந்தலாம். இந்த  யோக பானம் நரம்புகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
√இறைவனுடன் இசைந்திருத்தல் பதற்றத்திற்கு மிகச்சிறந்த ஒரு தீர்வாகும். தியான பரவசத்தில் நரம்புகள் பதற்றம் தணிந்து முழுமையான ஓய்வும் புத்துணர்ச்சியும் பெறுகின்றன. எனவே தியானம் பழகுதல் நன்று.

நாம் பதற்றம் அடைவதற்கு காரணம் பிறரோ அல்லது பிற விஷயங்களோ இல்லை என்பதை சரிவர உணர்ந்து மகான் யோகானந்தர் காட்டியுள்ள வழிமுறைகளை பின்பற்றிப் பதற்றம் தவிர்த்து வாழ்வோம்.

முகுந்தன் 9345314918,
யோகதா சத்சங்க தியான கேந்திரம்,
கோயமுத்தூர் 641 015.

 

Leave a Reply