மணல் கொள்ளையைர்களை தடுக்க முயன்ற பெண்கள் ,பொதுமக்களை தாக்கிய போலீசார்… கலெக்டரிடம் புகார் அளித்த கிராம மக்கள்….

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ளது நாகநாதபுரம் கிராமம். இக்கிராமம் அருகே உள்ள வைகை ஆற்றில் இரவு நேரங்களில் அவ்வப்போது மணல் திருடுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், பகலில் ஜே.சி.பி. இயந்திரம், டிராக்டரில் சட்ட விரோதமாக ஒரு கும்பல் மணல் அள்ளியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் குவாரி அமைக்க அரசு அனுமதியளித்து உள்ளதா? என அங்கு சென்று விசாரணையில் இறங்கினர்.
அப்போது, அருகில் உள்ள அரசு கட்டுமானத்திற்கு அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளியது தெரியவந்தது. இதனையடுத்து, கிராம மக்கள் திரண்டு, ஆற்றில் மணல் அள்ளினால் நிலத்தடி நீர் பாதிக்கும் என கூறி மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைக் கண்ட மணல் கொள்ளையர்கள் சிலர் டிராக்டரில் கொண்டு வந்த மணலை கொட்டிவிட்டு வேகமாக சென்றனர். அவர்களை வழிமறித்து இளைஞர்கள் சிறைபிடிக்க முயன்றனர்.
இந்த நிலையில், அங்கு வந்த காவல்துறையினர் சிலர், மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக ஜே.சி.பி. இயந்திரம், டிராக்டர்களை விடுவித்து, கிராமத்து இளைஞர்களை இழுத்து சென்று வண்டியில் ஏற்ற முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமத்து பெண்களையும் காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் அருகில் உள்ள பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சமுக வலைத்தளங்களில் வீடியோ வெளியானது.
இந்த நிலையில், கிராம மக்கள் ஒன்றுகூடி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அஷா அஜீத் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜை ஆகியோரை நேரில் சந்தித்து மணல் கொள்ளையர்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து அறிக்கை அளித்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
சட்ட விரோதமாக மணல் அள்ளியவர்களுக்கு ஆதரவாக காவல்துறையினர் கிராம மக்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.