7 ஆண்டுகளுக்கு பிறகு தலைமைச் செயலகத்தில் நுழைந்த அமலாக்கதுறை. தமிழக வரலாற்றில் மீண்டும் ஒரு கரும்புள்ளி…

7 ஆண்டுகளுக்கு பிறகு தலைமைச் செயலகத்தில் நுழைந்த அமலாக்கதுறை. தமிழக வரலாற்றில் மீண்டும் ஒரு கரும்புள்ளி…

சென்னை:

தலைமை செயலகத்திற்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வரலாற்றில் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதய தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் வீட்டிலும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிலும் தலைமைச் செயலகத்தில் உள்ள அறையிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் காலையில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக அரசியல் தலைவர்கள், அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடப்பது வழக்கமான ஒன்று ஆனால் மாநிலத்தின் அதிகார மையமாக திகழும் தலைமை செயலகத்தில் சோதனை நடத்துவது என்பது ஆளும் அரசிற்கு சங்கடத்தை அளிக்கக் கூடிய ஒன்றாகும்.

இதுபோன்ற நிகழ்வுகள் தமிழக அரசியல் வரலாற்றில் அரிதாக நடக்கக்கூடியது. கடந்த அதிமுக ஆட்சியில் தலைமை செயலாளராக ராம மோகன் ராவ் இருந்த போது 21.12.2016 அன்று அவரது வீட்டில் ஐடி ரெய்டு நடந்தது. அதன்பிறகு தலைமை செயலகத்தில் அவரது அறையில் சோதனை நடந்தது.

இந்நிலையில் இரண்டாவது முறையாக தலைமை செயலகத்தில் ரெய்டு நடவடிக்கைகள் அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் அரங்கேறியுள்ளது. இந்த சோதனையில் அமலாக்கத்துறை, இந்தியன் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான ஆவணங்களை எடுத்து கொடுக்கும் வகையில் அமைச்சரின் உதவியாளர்கள் அறையில் இருக்கின்றனர்.

தற்போது அமைச்சரின் அறைக்கு உள்ளே தாளிட்டு கொண்டு சோதனை நடைபெற்று வருகிறது . தலைமைச் செயலகத்திற்குள்ளும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தலைமை செயலகத்திற்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply