மகளிர் ஜூனியர் ஹாக்கி: முதல் முறையாக மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு !!

மகளிர் ஜூனியர் ஹாக்கி: முதல் முறையாக மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு !!

ஜப்பானில் ககாமிகஹரா பகுதியில் 8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடந்தது. இதில், இந்தியா, தென் கொரியா, மலேசியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் சீன தைபே ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், ஜப்பான், சீனா, இந்தோனேஷியா, கஜகஜஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம் பெற்று விளையாடி வந்தன.

ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். லீக் போட்டியில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

அதன்படி, இந்தியா தனது முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தானை 22-0 என்ற கணக்கிலும், மலேசியாவை 2-1 என்ற கணக்கிலும், தென் கொரியாவை 2-2 என்ற கணக்கிலும், சீனா தைபே அணியை 11-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதே போன்று ஜப்பான் அணியும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதில், இன்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளும், 2-வது அரையிறுதிப் போட்டியில் சீனா மற்றும் தென் கொரியா அணிகளும் மோதின.

இதில், இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தென் கொரியாவும் 2-0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து இந்தியா மற்றும் தென் கொரியா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடந்தது. இதில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஜூனியர் ஹாக்கி அணி வீராங்கனைகளுக்கு தலா ரூ.2 லட்சமும், துணை பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்று இந்திய ஹாக்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தென் கொரியாவை வீழ்த்தி முதல் முறையாக ஹாக்கி சாம்பியனான இந்திய அணிக்கு பெங்களூரு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Leave a Reply