இன்று முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதி!!

இன்று முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதி!!

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்த நிலையில் ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை காட்டினார். தொடர்ந்து, கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது. நேற்று மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள், சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் ஆகியவற்றுடன் களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறுகிறது.

இன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 20-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். வழக்கம் போல் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

Leave a Reply