ஒரு மாவட்டத்தின் கலெக்டரையே கீழே தள்ளிவிடும் அளவுக்கு திமுகவினர் வன்முறையை அரங்கேற்றி வருகின்றனர்… வீடியோ வெளியிட்டு எடப்பாடி கண்டனம்…

சென்னை;
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் முன்னிலை வகித்த அந்த விழாவில், அந்த தொகுதி மக்களவை தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி வருவதற்கு முன்பே, அமைச்சர் ராஜகண்ணப்பனை வைத்து அரசு விழா தொடங்கியதால் அங்கிருந்த ஆட்சியர் விஷ்ணுசந்திரனிடம் நவாஸ்கனி எம்.பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, நவாஸ் கனியை அமைச்சர் ராஜகண்ணப்பன் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆனாலும், அவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இருவரின் ஆதரவாளர்களும் அங்கு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கைகலப்பும் ஏற்பட்டது.
தொடர்ந்து, இரு தரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சிகளில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த நவாஸ்கனியின் உதவியாளர் விஜயராமு என்பவர் ஆட்சியரை நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால், மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் கீழே விழுந்தார். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், விஜயராமு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரை தள்ளிவிடும் அளவுக்கு திமுகவின் வன்முறை அரங்கேற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“ஒரு மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கிற்கும், நிர்வாக அமைப்புக்கும் முழுப் பொறுப்புடையவர் மாவட்ட ஆட்சியர், அத்தகைய மாவட்ட ஆட்சியரையே உதாசீனப் படுத்தி கீழே தள்ளி விடும் அளவிற்கு இந்த ஆட்சியில் திமுகவின் வன்முறை அரங்கேற்றி வருகிறது.
மாவட்ட ஆட்சியரேயே தள்ளி விட்டவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை. இதுவே அம்மாவின் அரசாக இருந்திருந்தால் இப்படி நடை பெற்றிருக்குமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏதேச்சதிகாரத்தில் தன்னிலை மறந்து தரம் தாழ்ந்து நடக்கும் இந்த அரசை மக்கள் துணை கொண்டு விரட்டியடிக்கின்ற காலம் விரைவில் வரும் எனவும் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.