திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மிக பிரம்மாண்டமாக சகஸ்ர கலசாபிஷேகம்!!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடந்தோறும் ஏராளமான உற்சவங்கள் நடத்தப்படுவது வழக்கம். திருப்பதிக்கு சென்றால் கூட்ட நெரிசலில் வேகமாக சென்று மூலவர் வெங்கடேச பெருமாளை மட்டுமே அவசரமாக பார்த்துவிட்டு வந்து விடுகிறோம்.
ஆனால் மூலவரின் காலடியில் சிறிய விக்ரஹமாக இருக்கும் போக ஸ்ரீனிவாசரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இவருக்கு வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு அபிஷேக உற்சவம் நடத்தப்படும்.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சகஸ்ர கலசாபிஷேகம் மிக பிரம்மாண்டமாக நடத்துவதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
போக ஸ்ரீநிவாசரின் பாதத்திற்கு கீழ் ஒரு பீடம் உள்ளது. இதில் யந்திரம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்ற யந்திரம் மூலவரான துருவ பேரரின் திருவடிக்கு கீழும் உள்ளது.
போக ஸ்ரீநிவாசர், மூலவரான துருவ பேரரின் திருவடிகளுக்கு அருகிலேயே காட்சி தருகிறார். ஸ்ரீதேவி – பூதேவி சமேத மலையப்ப சுவாமி, போக ஸ்ரீநிவாசர் மற்றும் விஸ்வசேனா ஆகியோருக்கு இந்த சகஸ்ர கலசாபிஷேகம் நடத்தப்படும்.
ஆரம்பத்தில் வாரந்திர சேவையாக நடத்தப்பட்டு வந்த இந்த சகஸ்ர கலசாபிஷேகம், தற்போது வருடாந்திர உற்சவமாக மாற்றப்பட்டுள்ளது.
சகஸ்ர கலசாபிஷேகத்தின் போது தங்க கதவிற்கு வெளியே போக ஸ்ரீநிவாசரின் விக்ரஹரம் எடுத்து வரப்படும். அப்போது பட்டு நூலின் ஒரு பகுதி போக ஸ்ரீனிவாசரின் பாதத்துடனும், நூலின் மறுமுனை மூலவருடனும் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த போக ஸ்ரீனிவாசரின் திருமேனி 1400 ஆண்டுகள் பழமையானது என சொல்லப்படுகிறது. தினமும் சயன மண்டபத்தில் இந்த போக ஸ்ரீனிவாச மூர்த்தியே ஊஞ்சலில் கண் துயில வைக்கப்படுகிறார். அதுனால் இவருக்கு சயன பேரர் என்ற திருநாமமும் உண்டு. இவர் பக்தர்களின் பாவங்களை நீக்கி, அருளை வாரி வழங்கக் கூடியவராக திருமலையில் அருள் செய்கிறார்.
தோமாலை சேவையின் போதும் ஏகாந்த சேவையின் போதும் போக ஸ்ரீனிவாசப் பெருமாளின் விக்ரஹம் தான் பயன்படுத்தப்படுகிறது.
இவரே மூலவரான துருவ பேராவின் சக்தியை தூண்டு பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக சொல்லப்படுகிறது. இவரே மூலவரின் பிரதிநிதியாக உற்சவங்கள் காண்பதாகவும் சொல்லப்படுகிறது.