கோவை மத்திய சிறையில் கலவரம் … கைதிகள் வார்டன்கள் இடையே திடீர் மோதல் …. 11 பேர் காயம் …பரபரப்பு..

கோவை மத்திய சிறையில் கலவரம் … கைதிகள் வார்டன்கள் இடையே திடீர் மோதல் …. 11 பேர் காயம் …பரபரப்பு..

கோவை:

 கோவை மத்திய சிறையில் சுமார் 2 ஆயிரம் கைதிகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு காலை, மதியம், இரவு நேரங்களில் உணவு வழங்கப்படுகிறது. நேற்று காலை உணவு வழங்கும் நேரத்தில் வார்டன்கள் 2 பேர் சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கிறதா? என சோதனை செய்தனர்.

கைதிகள் சிலரை வேறு பகுதிக்கு பிரித்து மாற்றி அடைப்பதாக கூறி வெளியே அழைத்து வந்து உள்ளனர்.

இதற்கு கைதிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதை வார்டன்கள் ஏற்கவில்லை. கைதிகளை பிரித்து அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் வாக்குவாதம், மற்றும் தகராறில் ஈடுபட்டனர். இந்த சத்தம் கேட்டு அங்கே மேலும் சில வார்டன்கள் அங்கே வந்தனர். அந்த நேரத்தில் வார்டர்களை கைதிகள் தாக்க முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்த சில வார்டன்கள் அவர்களை மடக்க முயன்றனர்.

அப்போது மோதல் மேலும் அதிகமானது. கைதிகள் வார்டன்களை தாக்கி, அவர்களது சட்டைகளை கிழித்ததாக தெரிகிறது. வார்டர்களும் பதிலடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது சில கைதிகள் வளாகத்திற்குள் இருந்த உயரமான மரத்தின் மீது ஏறி, ‘‘எங்களை தாக்கினால், நடவடிக்கை எடுத்தால் கழுத்தை அறுத்து கொள்வோம்’’ என கூறி பிளேடாலும் உடலை கீறி கொண்டனர்.

 பதற்றமான சூழல் ஏற்பட்டதால் அங்கே மரத்தில் ஏறிய கைதிகளை சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இறங்க வைத்தனர். தகராறு செய்த கைதிகளை தடியடி நடத்தி செல்களுக்கு விரட்டினர்.

இந்த திடீர் மோதலில் வார்டன்கள் ராகுல், மோகன்ராஜ், பாபு ஜான், விமல் ராஜ் ஆகியோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தாக்குதலில் மதுரையை சேர்ந்த விசாரணை கைதிகள் தினேஷ், உதயகுமார், அரவிந்த், ஹரிகரன், அழகர் சாமி, அய்யனார், கிஷோர்குமார் ஆகியோரும் காயமடைந்தனர்.

இது தொடர்பாக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply