சத்துணவு முட்டைகளை ஓட்டலுக்கு விற்று வந்த  அங்கன்வாடி  ஊழியர்கள்… கையும் களவுமாக பிடித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ..

சத்துணவு முட்டைகளை ஓட்டலுக்கு விற்று வந்த  அங்கன்வாடி  ஊழியர்கள்… கையும் களவுமாக பிடித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ..

கள்ளக்குறிச்சி ;

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நகரில் உள்ள ஓட்டல்களில் உணவு பரிசோதனை மேற்கொண்டனர். அதில் ஒரு ஓட்டலில் சத்துணவு மையத்திற்கு கொடுக்கப்பட்ட ஏராளமான முட்டைகள் இருந்தன.

இந்த விவகாரத்தின் முதற்கட்ட விசாரணையில், முட்டைகள் கடலூர் மாவட்ட பகுதிகளில் இருந்து இந்த ஓட்டலுக்கு விற்பனை செய்ததாக தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட துணை இயக்குநர், மாவட்ட ஊட்டச்சத்து அலுவலர், குழந்தை வளர்ச்சி திட்ட மங்களூர் வட்டார அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, இதுகுறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

 இந்தக் குழு நடத்திய விசாரணையில் சிறுப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி சத்துணவு மையத்தில் உதவியாளராக வேலை செய்து வரும் சாந்தி என்பவரிடமிருந்து முட்டைகள் வாங்கி மையத்தின் சமையல் உதவியாளராக வேலை செய்து வரும் செல்வி என்பவர் தனது மகன் அரவிந்திடம் கொடுத்துள்ளார்.

அவர், சபரி என்பவர் மூலம் சேலத்தில் உள்ள மளிகை கடைகளுக்கு விற்பனை செய்து அங்கிருந்து ஓட்டல்களுக்கு முட்டைகளை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அதேபோல் சபரி, தான் வேலை பார்க்கும் கடையில் பெருமளவில் சத்துணவு முட்டைகளை வைத்து அங்கிருந்து விற்பனை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில், சத்துணவு முட்டைகளை பயன்படுத்திய அந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். முட்டை விற்பனை செய்த சபரி, அரவிந்த், மற்றும் கடை உரிமையாளர் ஆகியோர் மீது காவல் துறை மூலம் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அரசு உணவுப் பொருட்களை தனி நபர்களுக்கு விற்பனை செய்த காரணத்திற்காக சிறுப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அங்கன்வாடி உதவியாளர் சாந்தி, பணியாளர் செல்வி ஆகிய இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டு உள்ளார்.

Leave a Reply