கோர்ட்டை அவமதித்த தாசில்தாருக்கு வித்தியாசமான தண்டனை வழங்கிய நீதிமன்றம் …

கோர்ட்டை அவமதித்த  தாசில்தாருக்கு வித்தியாசமான  தண்டனை வழங்கிய  நீதிமன்றம் …

சென்னை:

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா , கடலாடி கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிக்கப்பட்டதாக முருகன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், இந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமிப்புகளை 4 வாரத்துக்குள் அகற்றப்படும் என்று அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அதன் பின்னரும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் தாசில்தார் குற்றவாளி என்று நீதிபதிகள் கடந்த 3-ந்தேதி அறிவித்தனர். இந்த வழக்கில் தண்டனை வழங்குவதற்காக தாசில்தாரை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

இதன்படி இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட தாசில்தார் லலிதா நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

அரசு தரப்பிலும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, இந்த ஆக்கிரமிப்புகளை 3 வாரங்களில் அகற்றுவதாக உறுதியளித்தார். இதையடுத்து நீதிபதிகள், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதால் தாசில்தார் லலிதாவுக்கு கடுமையான தண்டனை வழங்க விரும்பவில்லை.

ஆனால், அவர் “கோர்ட்டு பணி முடியும் வரை, ஒரு நாள் கோர்ட்டு அறையில் இருக்க வேண்டும். அதேநேரம், ஆக்கிரமிப்புகளை அகற்றி 3 வாரங்களுக்குள் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவின்படி, தாசில்தார் நேற்று மாலை வரை தலைமை நீதிபதி கோர்ட்டு அறைக்கு வெளியில் அமர்ந்து இருந்தார்.

dinaparavai

Related articles

Leave a Reply