ஆட்டநாயகன் விருதை எங்கள் நாட்டில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்’- முஜீப் ரகுமான்!!

புதுடெல்லி:
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று அரங்கேறிய 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், ஆப்கானிஸ்தானும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் ஆப்கானிஸ்தானை பேட் செய்ய அழைத்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 284 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டும், மார்க்வுட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
285 ரன் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் 215 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்று பலம் வாய்ந்த இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது.
இங்கிலாந்தின் பேட்டிங் முதுகெலும்பை சுக்குநூறாக்கிய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் முஜீப் ரகுமான், ரஷித்கான் தலா 3 விக்கெட்டும், முகமது நபி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். நடப்பு தொடரில் 3-வது ஆட்டத்தில் ஆடிய ஆப்கானிஸ்தானுக்கு இது முதலாவது வெற்றியாகும். இங்கிலாந்து சந்தித்த 2-வது தோல்வியாகும்.
இந்த போட்டியில் 28 ரன் மற்றும் 3 விக்கெட் எடுத்து ஆல்-ரவுண்டராக மின்னிய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
வெற்றி குறித்து அவர் கூறுகையில், ‘உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனை தோற்கடித்தது எங்களுக்கு பெருமைமிக்க தருணம். ஒட்டுமொத்த அணியின் மிகச்சிறந்த சாதனை. இத்தகைய வாய்ப்புகாகத் தான் கடினமாக உழைக்கிறோம்.
பேட்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களின் அற்புதமான செயல்பாடு இதுவாகும். இந்த விருதை, எங்கள் நாட்டில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்றார்.