ராஜராஜ சோழன் சதயவிழா: 1038 பரதநாட்டியக் கலைஞர்கள் பிரமாண்ட நாட்டிய நிகழ்ச்சி !!

ராஜராஜ சோழன் சதயவிழா: 1038 பரதநாட்டியக் கலைஞர்கள் பிரமாண்ட நாட்டிய நிகழ்ச்சி !!

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவில் 1038 பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.

இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

விடுமுறை நாட்களில் பெரியகோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். இத்தகைய பெருமையும், புகழும் உடைய, உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர் மாமன்னன் ராஜராஜசோழன்.

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது பெரிய கோயில் என்றால் மிகையில்லை. ராஜ ராஜ சோழனின் பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

தஞ்சை பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா ஐப்பசி மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்தாண்டு சதயவிழா பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சியுடன் தொடங்கியது. காலையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா என்பதை ஒட்டி 1038 பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட நாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இதற்காக கோயில் வளாகத்தில் மகா நந்திகேசுவரர் மண்டபத்தைச் சுற்றியுள்ள மேடையில் திறந்தவெளி அரங்கு அமைக்கப்பட்டது.

இதில், தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கேற்றனர். ஏறத்தாழ 25 குழுக்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மேலும் தனி நபர்கள் 50 பேர் பங்கேற்று நடனமாடினர்.

சிறுமிகள் முதல் பெரியவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு கலைஞருக்கும் அடையாள எண் வழங்கப்பட்டது. இதன்படி வரிசையாக நிறுத்தப்பட்டு, நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் பாட்டு, மிருதங்கம், தவில், வீணை உள்பட சுமார் 50 இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு இசைத்தனர்.

சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மொத்தம் 3 பாடல்கள் பாடப்பட்டன. நிகழ்ச்சியை ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டு ரசித்தனர். இதேபோல, இக்கோயிலில் கடந்த 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆயிரமாவது ஆண்டு விழாவில் ஆயிரம் பரத நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர். ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இரண்டாவது முறையாக 1,038 பேர் பங்கேற்று நடனமாடியது குறிப்பிடத்தக்கது.

பின்னர் கவியரங்கம், சிவதாண்டவம், இசை நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. சதய விழா நாளான இன்று ம் தேதி காலை 7.20 மணிக்கு மாமன்னன் சிலைக்கு மாலை அணிவித்தல், 8 மணிக்கு திருமுறைத் திருவீதி உலா, காலை 9.10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷேகம், பிற்பகல் 1.40 மணிக்கு பெருந்தீப வழிபாடு, மங்கள இசை, நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, மாலை 4 மணிக்கு நாட்டியாஞ்சலி, நாத சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள நிறைவு விழாவில் முனைவர் அ.தெட்சிணாமூர்த்தி, மருத்துவர் எம். செல்வராஜ், ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநர் வ. பழனியப்பன், கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு மாமன்னன் இராசராசன் விருது வழங்கப்படவுள்ளது. இதையடுத்து, இரவு 8 மணிக்கு சுகிசிவம் நடுவராகப் பங்கேற்கும் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சதய விழாவை ஒட்டி இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply