வெற்றி நெருக்கடியில் பாகிஸ்தான் தென்ஆப்பிரிக்காவுடன் நாளை பலப்பரீட்சை!!

வெற்றி நெருக்கடியில் பாகிஸ்தான் தென்ஆப்பிரிக்காவுடன் நாளை பலப்பரீட்சை!!

உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் 2 வெற்றி, 3 தோல்வியு டன் 4 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

சென்னை:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு 5 ஆட்டங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுவரை 4 போட்டிகள் முடிந்துள்ளன.

கடந்த 8-ந்தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவையும், 13-ந் தேதி நடந்த 2-வது போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும், 18-ந்தேதி நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் நியூசிலாந்து 149 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், 23-ந் தேதி நடந்த 4-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் தோற்கடித்தன.

சேப்பாக்கம் மைதானத்தில் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இது உலக கோப்பை தொடரின் 26-வது போட்டியாகும். இதில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான்-மார்க்ராம் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் 2 வெற்றி, 3 தோல்வியு டன் 4 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி பாகிஸ்தான் அணிக்கு உள்ளது. தோற்றால் வெளியேற்றப்படும். பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துவது சவாலானது.

அந்த அணி முதல் 2 ஆட்டங்களில் நெதர்லாந்து (81 ரன்), இலங்கையை (6 விக்கெட்) வென்றது. அதைத் தொடர்ந்து இந்தியா (7 விக்கெட்), ஆஸ்திரேலியா (62 ரன்), ஆப்கானிஸ்தான் (8 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது.

ஆப்கானிஸ்தானிடம் தோற்றது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். 282 ரன் குவித்தும் மோசமான பந்து வீச்சு, பீல்டிங்கால் அதிர்ச்சிகரமாக தோற்றது. தொடர் தோல்வியில் இருந்து அந்த அணி மீளுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி இலங்கையை 102 ரன் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை 134 ரன் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை 229 ரன் வித்தியாசத்திலும், வங்காளதேசத்தை 149 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. நெதர்லாந்திடம் 38 ரன்னில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

தென் ஆப்பிரிக்காவின் அதிரடி நாளையும் தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி பாகிஸ்தானை வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங்கில் குயின்டன் டி காக் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 3 சதத்துடன் 407 ரன்கள் குவித்துள்ளார். கிளாசன் (288 ரன்), கேப்டன் மார்க்ராம் (265 ரன்) வான்டர் டூசன் (199 ரன்) ஆகியோரும் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.

பந்து வீச்சில் ரபடா, மார்கோ ஜான்சென், கோயட்ஸ் (தலா 10 விக்கெட்), கேசவ் மகராஜ் (7 விக்கெட்), நிகிடி (6 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

இரு அணிகளும் நாளை மோதுவது 83-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 82 ஆட்டத்தில் பாகிஸ்தான் 30-ல், தென் ஆப்பிரிக்கா 51-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

உலக கோப்பையில் 5 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 2-ல், தென் ஆப்பிரிக்கா 3-ல் வெற்றி பெற்றுள்ளன.

Leave a Reply