13 பவுர்ணமிகள் கோரக்கரை தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும் !!

13 பவுர்ணமிகள் கோரக்கரை தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும் !!

வடக்கு பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் ஆசிரமத்தை எந்த நாள்களிலும் சென்று வழிபடலாம். இங்கு ஒவ்வொரு நாளும் 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக குருவாரம் எனப்படும் வியாழக்கிழமை (கோரக்கர் பிறந்த நாள் என்பர்) அன்று வழிபடுவது சிறப்பாகும்.

வியாழக்கிழமைகளில் காலை முதல் உபவாசம் இருந்து இரவு வழிபட்டு, பிரசாதம் உண்டு, கோவில் வளாகத்தில் தங்கி உறங்கி, விடியல் நீராடி கோரக்கரை வழிபட்டு திரும்பினால் மனக்கவலைகள் அகலும்.

மேலும், பவுர்ணமி அன்று வழிபட்டால் ஒரு மாதம் வழிபட்ட பயன் கிடைக்கும். ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று அன்னாபிஷேக வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும். அன்று கோரக்கரை தரிசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஐப்பசி பரணி தினத்தன்று வழிபட்டால் ஓராண்டு வழிபட்ட பலன் கிடைக்கும். தொடர்ந்து, 13 பவுர்ணமிகள் கோரக்கரை தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோரக்கரை வழிபட்டால் திருமணமாகாத இளம் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைபேறு இல்லாத தம்பதிக்கு குழந்தைபேறு கிட்டும். புற்றுநோய் முதலிய அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம். மன வளர்ச்சி குன்றியோர் இங்கு வந்து சென்றால் மனநலம் பெறுகிறார்கள்.
களவுபோன பொருட்கள் திரும்ப கிடைக்கின்றன. தொலை தூர பயணம் மேற்கொள்ளும் போது இவரை வணங்கி புறப்பட்டால் சிறப்பான பயணமாக அமைவதோடு செல்வ வளமும் கூடும் என்கின்றனர் பக்தர்கள்.

கருவறையில் உள்ள சிவன், உமை, சித்தர் திருவடிகளுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது குடும்ப பிரச்சினைகளை நீக்குவதோடு, வெளியில் சொல்ல முடியாத கவலைகளையும் அகற்ற துணையாகிறது. நூற்றுக்கணக்கான துறவிகள் உலக நாடுகளில் இருந்து கோரக்கரை வழிபட்டு ஞான விரிவு பெறுகிறார்கள்.

ஆசிரம வளாகத்தில் வட சுற்றில் வளர்ந்துள்ள நாகலிங்க மரத்தை 3 முறை வலம் வந்தால் சிவனருளும், குருவருளும் ஒருசேர வாய்க்கின்றன. கோரக்கர் படத்தை வீடுகளில் வைத்து பூஜிப்பதும், பயண நேரங்களில் சட்டை பையில் வைத்து கொண்டு பயணிப்பதும் நன்மை தருவன. இவரை இயல், இசை, நாடக கலை வல்லுநர்கள் வழிபட்டு புதிய வாய்ப்புகளை பெற்று உயர்கிறார்கள்.

சித்தர்கள் போற்றிய பெரும் சித்தர் கோரக்கர். அதனால் அவரை தொழுவது சித்தர் உலகையே பூஜித்து கோடி புண்ணியப்பலன் பெறுவதற்கு சமமாகும்.

Leave a Reply