உலகக் கோப்பை கிரிக்கெட் : 8 அணிகள் அரைஇறுதி வாய்ப்புக்கு மல்லுக்கட்டும் !!

உலகக் கோப்பை கிரிக்கெட் : 8 அணிகள் அரைஇறுதி வாய்ப்புக்கு மல்லுக்கட்டும் !!

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. 31 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

இன்னும் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அணியும் அரைஇறுதியை எட்டவில்லை. இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்டன. அரைஇறுதிக்கான 4 இடத்துக்கு 8 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. யார்-யாருக்கு எப்படி வாய்ப்பு என்பது பற்றிய ஒரு அலசல்:-

இந்தியா : நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா 6 வெற்றிகளுடன் (12 புள்ளி) கம்பீரமாக பயணிக்கிறது. இந்தியா அரைஇறுதியை எட்டிவிட்டது என்று 99 சதவீதம் சொல்லலாம்.

ஆனாலும் அதிகாரபூர்வமாக உறுதி செய்ய இன்னும் ஒரு வெற்றி தேவை. மற்றபடி இந்தியாவுக்கு எந்த சிக்கலும் இல்லை.

மோத வேண்டிய ஆட்டங்கள்: இலங்கை (நவ.2), தென்ஆப்பிரிக்கா (நவ.5), நெதர்லாந்து (நவ.12).

தென்ஆப்பிரிக்கா: அதிரடியில் பிரமாதப்படுத்தும் தென்ஆப்பிரிக்க அணி 5 வெற்றி, ஒரு தோல்வி என்று 10 புள்ளியுடன் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. அத்துடன் 2-க்கும் மேல் ரன்ரேட் வைத்திருப்பது தென்ஆப்பிரிக்காவுக்கு இன்னொரு பிளஸ் பாயிண்டாகும். எஞ்சிய நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றாக வேண்டும்.

வலுவான ரன்ரேட்டுடன் இருப்பதால் குறைந்தது ஒரு வெற்றியாவது அவசியம். தென்ஆப்பிரிக்கா இப்போதுள்ள பார்முக்கு 3 ஆட்டங்களிலும் வாகை சூடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மோத வேண்டிய ஆட்டங்கள்: நியூசிலாந்து (நவ.1), இந்தியா (நவ.5), ஆப்கானிஸ்தான் (நவ.10).

நியூசிலாந்து: முதல் 4 ஆட்டங்களில் வரிசையாக வெற்றிகளை வாரி சுருட்டிய நியூசிலாந்து அணி, கடைசி இரு ஆட்டங்களில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது.

அந்த அணி இன்னும் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கையுடன் மல்லுக்கட்ட வேண்டி உள்ளது. இவற்றில் கட்டாயம் 2-ல் வெற்றி பெற்றாக வேண்டும். ஒன்றில் மட்டும் வென்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.

மோத வேண்டிய ஆட்டங்கள்: தென்ஆப்பிரிக்கா (நவ.1), பாகிஸ்தான் (நவ.4), இலங்கை (நவ.9).

ஆஸ்திரேலியா: 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா முதல் இரு ஆட்டங்களில் தோற்றாலும் அடுத்த 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றிக்கனியை பறித்து 8 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா இப்போது சிறந்த நிலையில் இருப்பதால் மீதமுள்ள 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெறுவது பெரிய அளவில் பிரச்சினையாக இருக்காது. அதுவும் வங்காளதேசம், ஆப்கானிஸ்தானுடன் எல்லாம் ஆட்டங்கள் இருப்பதால் ஆஸ்திரேலியா அரைஇறுதியை எட்டிவிடும் என்பதே நிபுணர்களின் கணிப்பு.

மோத வேண்டிய ஆட்டங்கள்: இங்கிலாந்து (நவ.4), ஆப்கானிஸ்தான் (நவ.7), வங்காளதேசம் (நவ.11).

ஆப்கானிஸ்தான்: சிறிய அணி என்று வர்ணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் வியப்பூட்டும் வகையில் எழுச்சி கண்டுள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான் 3 வெற்றி, 3 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் நல்ல நிலையில் உள்ளது.

அந்த அணி எஞ்சிய லீக் அனைத்திலும் (நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக) வென்றால் முதல்முறையாக அரைஇறுதிக்குள் கால்பதித்து வரலாறு படைக்கலாம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஒரு வேளை ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளில் ஒன்றுக்கு ஆப்கானிஸ்தான் ‘ஆப்பு’ வைத்தால், ஜாக்பாட் அடிக்கலாம்.

மோத வேண்டிய ஆட்டங்கள்: நெதர்லாந்து (நவ.3), ஆஸ்திரேலியா (நவ.7), தென்ஆப்பிரிக்கா (நவ.10).

மற்ற 3 அணிகள்

பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் ஒரே மாதிரியான நிலைமையில் தவிக்கின்றன. அரைஇறுதி வாய்ப்பில் லேசாக ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த அணிகள் தங்களது எஞ்சிய ஆட்டங்களில் முழுமையாக வென்றால் அதிகபட்சமாக 10 புள்ளி வரை எட்ட முடியும்.

அவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க வேண்டும் என்றால், மற்ற அணிகளின் முடிவுகள் ஒருசேர சாதகமாக அமைய வேண்டும். குறிப்பாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் தங்களது எஞ்சிய ஆட்டங்களில் மண்ணை கவ்வ வேண்டும். மேலும் ரன்ரேட்டிலும் ஏற்றம் காண வேண்டும்.

இதில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி, மீதமுள்ள இரு ஆட்டங்களில் நியூசிலாந்து (நவ.4) மற்றும் இங்கிலாந்தை (நவ.11) சந்திக்கிறது.

Leave a Reply