14 ஆண்டுகளுக்கு பிறகு ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் !!

14 ஆண்டுகளுக்கு பிறகு ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் !!

நாமக்கல்:
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லால் ஆன 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். உலக பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் கட்டளைதாரர்கள் மூலம் வடமாலை அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

இக்கோவிலில் கடைசியாக 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கிடையே நடப்பாண்டில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, ரூ.64 லட்சத்து 60 ஆயிரம் செலவில் பணிகள் முடிக்கப்பட்டன.

மகா கும்பாபிஷேகம்

இதையடுத்து 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை யொட்டி கோவில் முன்பு வாழை, செங்கரும்பு, காய்,கனிகளால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் அலங்கார பந்தலுடன் யாகசாலை அமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்று வந்தது.

இதையடுத்து இன்று (புதன்கிழமை) காலை 7.15 மணி அளவில் வருண தீர்த்தம், புனித படுத்துதல் அனுதின ஹோமம், ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி, தாரா ஹோமம், வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம், திருவாராதனம், சக்தி சங்கரஹணம், காலை 9.10 மணிக்கு யாத்ராதானம், கும்பப்ரயாணம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு எனும் மகா கும்பாபிஷேக பெருவிழா, மகா சம்ப்ரோஷணம் கோலாகலமாக நடை பெற்றது. ஆஞ்சநேயர் சாமி மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார்.

அதனை தொடர்ந்து 10.45 மணிக்கு தசதரிசனம், சிறப்பு திருவாராதனம், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம், பிரம்ம ேகாஷம், அருட்பிரசாதம், தீர்த்த பிரசாதம் வழங்குதல், ஆச்சார்ய பஹுமானம், காலை 11.45 மணிக்கு ஸர்வ தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.ராஜேஷ்குமார் எம்.பி., கலெக்டர் உமா, இந்து சமய அறநிலைய துறை சிறப்பு அதிகாரி குமரகுருபரன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், அறங்காவல் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் சீனிவாசன், மல்லிகா குழந்தைவேல், ரமேஷ்பாபு, செல்வசீராளன், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், நகராட்சி தலைவர் கலாநிதி, துணைதலைவர் பூபதி, நகர்மன்ற உறுப்பினர் டி.டி. சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் குவிந்தனர்

கும்பாபிஷேகத்தை யொட்டி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம் முழங்க ஆஞ்சநேயரை வழிபட்டனர். பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆயிரகணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் நீண்ட நேரம் நின்று வரிசையில் இரும்பு தடுப்புகள் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவை காண அகன்ற திரை அமைக்கப்பட்டிருந்தது.

கோவில் மற்றும் கோவில் வளாகம் பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. விழாவில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவில் வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள தெருக்களில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தப்பட்டு கோவில் அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணித்தனர். இதேபோல் கண்காணிப்பு கோபுரம் அமைத்தும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பக்தர்களின் கூட்டத்தை முறைப்படுத்த சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்து கண்காணித்தப்படி இருந்தனர்.

பக்தர்களுக்கு பல்வேறு குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தீயணைப்பு, சுகாதாரம், வருவாய், போக்குவரத்துதுறை, நகராட்சி, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply