முருகா என்று ஒருமுறை அழைத்தால் உருகாத மனமும் உருகும்!! ஆறுபடைவீடுகள்….

முருகா என்று ஒருமுறை அழைத்தால் உருகாத மனமும் உருகும்!! ஆறுபடைவீடுகள்….

முருகன் என்றால் `அழகன்’ என்று பொருள். கார்த்திகை மாதம் கந்தனுக்கு உகந்த மாதம். அழகென்ற சொல்லுக்கு முருகா! உந்தன் அருளின்றி உலகத்தில் பொருளேது! முருகா! என்று ஒரு அற்புதமான பாடல் உண்டு. முருகா என்று ஒருமுறை அழைத்தால் உருகாத மனமும் உருகும், பெருகாத செல்வம் பெருகும்.

இந்த மாதத்தில் ஆறுபடை வீட்டு முருகனை வழிபட்டால் அளவற்ற அருள் கிடைக்கும். ஆறுபடை வீட்டிற்கும் செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் ஒரு படை வீட்டுடிற்காவது சென்று ஆறுமுகனை வழிபட்டு வரலாம். முருகப்பெருமான் ஆறுமுகங்களைப் பெற்றிருப்பதால் ஒரே நேரத்தில் ஆறு பேருடைய பிரச்சினைகளை அழிக்க வல்லவன். பனிரெண்டு கரங்களை பெற்றிருப்பதால் அள்ளிக்கொடுக்ககும் ஆற்றலைப் பெற்ற வள்ளல். அதனால் தான் நாம் கேட்ட வரத்தை கேட்ட நிமிடத்திலேயே பெற முடிகிறது.

வேலோடும், மயிலோடும் வந்து நம் வேதனைகளை எல்லாம் மாற்றி, சாதனைபுரிய வைப்பவன் முருகப்பெருமான் என்பதை கும்பிட்டவர்கள் அனுபவத்தில் உணர்ந்து கொள்ளலாம்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் பறந்து வந்தது. அந்த தீப்பொறிகள் கங்கையில் பறந்த போது கங்கையே வற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே ஈஸ்வரனின் ஆணைப்படி சரவண பொய்கையில் ஆறு தாமரை மலர்களின் மீது ஆறு தீப்பொறிகளையும் விட்டனர். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்து விசாகத் திருநாளில் அவதரித்தவன் முருகப்பெருமான்.

கங்கையில் தோன்றியதால் ‘காங்கேயன்’ என்ற ஒரு பெயர் வந்தது. சரவண பொய்கையில் தோன்றியதால் தான் ‘சரவண பவன்’ என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றதால் ‘கார்த்திகேயன்’ என்றும் திருநாமம் உண்டாயிற்று.

திருப்பரங்குன்றம்

இது முதல் படைவீடாகும். தேவர்களின் துயரம் நீக்கிய முருகப்பெருமானுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையைத் திருமணம் செய்து வைத்த இடம் திருப்பரங்குன்றம்.

திருச்செந்தூர்

அடுத்ததாக சூரபத்மனை சம்ஹாரம் செய்து முருகப்பெருமான் வெற்றிகண்ட இடம் திருச்செந்தூர். மாமரமாக நின்ற சூரனை முருகப்பெருமான் வேலாயுதத்தால் இரண்டாகப் பிளந்தார். ஒரு பகுதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார் முருகப்பெருமான். சேவலை கொடியாக்கிக்கொண்டான்.

பழனி

இது மூன்றாவது படைவீடாக உள்ளது. மாம்பழத்திற்காக மயிலேறிப் பறந்து சென்று உலகைச்சுற்றினார்கள் பிள்ளையாரும், முருகனும். ஆனால் முன்னதாகவே `அன்னையும் பிதாவும் அகிலம்’ என்று சொல்லி சிவன்-பார்வதியை சுற்றி வந்து பழத்தை வாங்கிக்கொண்டார் ஆனைமுகப் பெருமான். எனவே கோபத்தோடு முருகன் மலையேறி நின்ற இடம் தான் பழனி.

சுவாமிமலை

நான்காம் படை வீடு சுவாமிமலை. தந்தைக்கு மந்திரத்தை உபதேசித்த இடமாகும். பொதுவாக உபதேசிப்பவர்கள் உயர்ந்த இடத்திலும், உபதேசம் பெறுபவர்கள் அதற்கு கீழும் தான் இருக்க வேண்டும். முருகப்பெருமான் சிவபெருமானின் மடியை ஆசனமாக்கிக் கொண்டு அதில் அமர்ந்து சிவன் காதில் உபதேசிப்பது புதுமை. பிரணவத்தின் பொருளை உபதேசித்ததால் தான் `சுவாமிநாதன்’ என்ற பெயர் உண்டாயிற்று.

திருத்தணி

ஐந்தாம் படை வீடு திருத்தணி. முருகப்பெருமானுக்கு கோபம் தணிந்த இடம் திருத்தணி. சினம் இருந்தால் பணம் வராது. எனவேதான் மனிதர்கள் சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும். என்பார்கள். சிரித்த முகத்தோடு இருந்தால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே கோபம், படபடப்பு இருப்பவரிகள் அது நீங்க இத்திருத்தலம் சென்று வழிபடுவது நல்லது.

பழமுதிர்சோலை

ஆறாவது படை வீடு பழமுதிர்சோலை. அவ்வை பாட்டிக்கு அறிவுரை கூறிய இடம் என்பார்கள். ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று தமிழ்ப்புலமை பெற்ற அவ்வையிடம் வாதிட்ட இடம்தான் இது. இங்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் அறிவாற்றல் பெருகும். ஆராய்ச்சி பட்டம் பெற விரும்புபவர்கள் இங்கு சென்று வந்தால் வெற்றியை வேகமாகப் பெற முடியும்.

“வேலும் மயிலும், வேலும் மயிலும்` என்று சொல்லி அந்த வேலவனின் ஆறுபடை வீட்டிற்கும் சென்று வாருங்கள். முருகப்பெருமானைக் கைகூப்பித்தொழுதால் நலம் யாவும் வந்து சேரும். படைவீடு செல்லுங்கள். பகை வெல்லும்! பணம் சேரும்!

Leave a Reply