இதய ரத்தக்குழாய் அடைப்புக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு!!

இதய அடைப்புக்கு முக்கியமான காரணம் கொழுப்பு தான். ஆரோக்கியமான உடலுக்கு கொழுப்பு கட்டாயம் தேவை. ஆனால் ரத்த கொழுப்பு அளவுக்கு அதிகமானால் இதயத்தில் அடைப்புகளை உண்டாக்கும்.
கீழ்க்கண்ட சித்த மருந்துகளில் ஏதேனும் ஒன்றை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பின்பற்றுவது நல்லது.
1) பூண்டு 5 பல், சிறிதளவு கொள்ளு, ஒரு சிட்டிகை பெருங்காயம் இவைகளை தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்து மாலை நேரங்களில் சாப்பிடலாம்.
2) இலவங்கப்பட்டை, ஏலம், செம்பருத்தி பூ, வெந்தயம் இவைகளை பொடி செய்து அதில் சிறிதளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீர் போல குடிக்கலாம்.
3) கோடம் புளி சிறிதளவு எடுத்து சீரகத்துடன் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.
4) ஏலாதிச் சூரணத்துடன் குங்கிலியப் பற்பம் கலந்து, வெந்நீரில் காலை, இரவு என இருவேளை குடித்து வந்தால் கொழுப்பின் அளவு குறையும்.
5) இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்க பூண்டு சாறு, புதினா சாறு, எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு இவைகளை சம அளவில் எடுத்து சூடாக்கி, ஆற வைத்து அதனுடன் சம அளவு ஆப்பிள் வினிகர் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில் தினசரி காலை 5 மி.லி. எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
6) வெண்தாமரை மலர் இதழ், செம்பருத்தி மலர் இதழ், மருத மரப்பட்டை, சீரகம், இலவங்கப்பட்டை இவைகளை பொடித்து அதில் ஒரு கிராம் வீதம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வர வேண்டும்.
தடுப்பு முறைகள்:
சின்ன வெங்காயம், பூண்டு இவை கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மையுடையதால் இவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி, சைக்கிளிங், நடைப்பயிற்சி, நீச்சல், பேட்மிண்டன் போன்ற ஏதாவதொரு பயிற்சியை உங்கள் உடல் திறனுக்கு ஏற்ப செய்ய வேண்டும். ஆரோக்கியமான உணவு வகைகள், காய்கறிகள், கீரைகள், பழங்கள் சாப்பிட வேண்டும்.
மூன்று வெள்ளைகளை அளவுடன் எடுத்தால் வாழ்நாள் அளவு கூடும். அவை, தீட்டிய வெள்ளை அரிசி, வெள்ளை சர்க்கரை, உப்பு.