திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா !!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா !!

திருமலை:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் `சிகர’ நிகழ்ச்சியாக நேற்று இரவு யானை வாகன வீதிஉலா நடந்தது.


நேற்று நடந்த யானை வாகனத்திலும், இன்று (புதன்கிழமை) இரவு நடக்கவிருக்கும் கருட வாகனத்திலும் எழுந்தருளும் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு, தங்க ஆபரணங்கள் அணிவிப்பதற்காக ஸ்ரீவாரி லட்சுமி காசு மாலை ஆரம் திருமலையில் இருந்து திருச்சானூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவாரி லட்சுமி காசு மாலை ஆரத்துக்கு சிறப்புப்பூஜைகள் செய்ததும், அதை ஒரு பெட்டியில் வைத்து தலையில் சுமந்தபடி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண. கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. ஊர்வலமாகக் கொண்டு வந்தார்.

ஏழுமலையான் கோவில் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் திருச்சானூருக்கு அனுப்பி வைத்தார்.

திருச்சானூரை அடைந்ததும், அங்குள்ள மஞ்சள் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்ட ஸ்ரீவாரி லட்சுமி காசு மாலை ஆரத்தை ஊர்வலமாக பத்மாவதி தாயார் கோவிலுக்குள் எடுத்துச் சென்று, அதை ஏழுமலையான் கோவில் துணை அதிகாரி லோகநாதம் ஒப்படைக்க, தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பெற்றுக் கொண்டார்.

முதலில் மூலவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்ரீவாரி லட்சுமி காசு மாலை ஆரம் அணிவிக்கப்பட்டு, பின்னர் யானை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் பத்மாவதி தாயாருக்கு அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

அப்போது திருச்சானூர் கோவில் துணை அதிகாரி கோவிந்தராஜன் உடனிருந்தார். திருமலையில் நடந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி உடனிருந்தார்.

Leave a Reply