உலகக் கோப்பையில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்த ரோகித் சர்மா!!

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். ரோகித் சர்மா தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 3-வது ஓவரில ஒரு சிக்ஸ் அடித்தார். 4-வது ஓவரிலும் சிக்ஸ் ஒன்று பறக்கவிட்டார்.
அதனைத் தொடர்ந்து 5-வது ஓவரிலும் ஒரு சிக்ஸ் அடித்தார். இந்த சிக்ஸ் உலகக் கோப்பையைில் அவரின் 50-வது சிக்ஸ் ஆகும். இதன்மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார்.
இதற்கு முன் கிறிஸ் கெய்ல் 49 சிக்ஸ் அடித்து முதல் இடத்தில் இருந்தார். தற்போது அவரை பின்னுக்குத் தள்ளியுள்ளார். மேக்ஸ்வெல் 43 சிக்ஸ், டி வில்லியர்ஸ் 37 சிக்ஸ், டேவிட் வார்னர் 37 சிக்ஸ் அடித்துள்ளனர்.
மேலும் இந்த உலகக் கோப்பையில் இது அவருடைய 27-வது சிக்ஸ் ஆகும். இதன்மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
கிறிஸ் கெய்ல் 2015-ல் 26 சிக்ஸ் அடித்துள்ளார். 2019-ல் மோர்கன் 22 சிக்ஸ், 2023-ல் மேக்ஸ்வெல் 22 சிக்ஸ், 2015-ல் டி வில்லியர்ஸ் 21, 2023-ல் டி காக் 21 சிக்ஸ் அடித்துள்ளனர்.
தொடர்ந்து விளையாடிய அவர் 29 பந்தில பவுண்டரி, 4 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.