பழனிக்கு மூத்த பழம்பதி – தல வரலாறு!!

பழனிக்கு மூத்த பழம்பதி – தல வரலாறு!!

கந்தசஷ்டி கவசப் பாடல் வரிகள், பல வீடுகளில் ஒலிப்பதை நாம் கேட்டிருப்போம். இறைவழிபாட்டில் காக்க..' என்று தொடங்கியோ அல்லது இறுதியாக முடித்தோ பாடும் பாடல்களைகவச மாலை’ என்று கூறுவது செய்யுள் மரபு. (கவசமாக இருந்து தங்களை காத்தருள வேண்டும் என்பதன் அடிப்படையில் பாடப் பெறுவதால் இப்படி கூறுவர்). பிற்காலத்தில் வழங்கப்பட்ட கவசமாலை நூல்களில் கந்தசஷ்டி கவசமே, பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றளவும் பாடப்பட்டு வருகிறது.

`ஞானப்பழத்தைப் பெற தனக்கு தகுதி இல்லையா’ என்ற கேள்வியுடன், பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு பழனிமலை (திருஆவினன்குடி) மீது தனித்து அமர்ந்தவர் முருகப்பெருமான்.


அதைத்தவிர அவர் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம், திருவேரகம் (சுவாமிமலை), திருச்செந்தூர், திருத்தணிகை, பழ முதிர்சோலை ஆகிய படைவீட்டு தலங்களும் சிறப்பு மிக்கதாக போற்றப் படுகிறது.

அறுபடை தலங்களையும் சஷ்டி திரு நாளில் தரிசிக்கச் சென்ற ஒரு முருக பக்தர், தன்னை காத்திட வேண்டி முருகப்பெருமானைப் வேண்டிப்பாடியதே ‘கந்தசஷ்டி கவசம்’. அந்த பக்தரின் பெயர், பாலதேவராயசுவாமி. இவரது காலம் 19-ம் நூற்றாண்டு.

கந்த சஷ்டி கவசத்தை பாலதேவராய சுவாமிகள் முதலில் பழனியில் ஆரம்பித்து, இதர ஐந்து படைவீடு களுக்கும் சென்று பாடி முடித்தார்.

கவசமாலை பாடுவோர் அப்பாடல்கள் யாருக்காக அல்லது யாரைக் குறித்து, யாரால் பாடப்பெற்றது என்பதை பாடல் வரி களிலேயே உட்புகுத்தி எழுதுவது வழக்கம்.

அதை இப்பாடலைக் கேட்கும்போது அறியலாம். கந்தசஷ்டி கவச பாடல் அடங்கிய நூலை, பாலதேவராய சுவாமி அரங்கேற்றிய திருத்தலம், ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகும். கந்தசஷ்டி கவசத்தில் வரும் `சிரகிரி வேலவன்’ எனும் வரிகள், சென்னிமலை முருகப்பெருமானைக் குறிப்பதாகும்.

தலச்சிறப்பு

சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆறுபடை வீடுகளுக்கும் முந்தைய கோவிலாகவும், நிகரான பெருமையை உடையதாகவும் கூறப்படுகிறது. சிவபெருமான் திருமணத்தைக் காண, தென்கோடி மக்கள் அனைவரும் வடகோடியில் குவிந்தனர். அப்போது வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது.

இதை சமன் செய்ய, அகத்தியரை தென்கோடிக்கு செல்லுமாறு சிவன் பணித்தார். இதனால் சிவன் – பார்வதியின் திருமணக் கோலத்தை காணமுடியாமல் போய்விடுமோ என அகத்தியர் வருந்தினார். இதை உணர்ந்த சிவபெருமான், என் திருமணக் கோலத்தை நீ விரும்பும் இடத்தில் காட்டியருள்வேன் என்று கூறினார்.

இதையடுத்து தென்திசை நோக்கி வந்த அகத்தியரை, அசுரர்களின் தலைவனான இடும்பாசுரன் சந்தித்து, தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி பணிந்தான். அகத்தியரும், இடும்பாசுரனை சீடனாக ஏற்றார்.

ஒருநாள், தென்திசை நோக்கிய அவசர பயணத்தால், தன் சிவ பூஜைக்குரிய பொருட்களை அருகில் உள்ள மலையில் இருந்து எடுத்து வரும்படி இடும்பாசுரனை பணித்தார்.

வடதிசை சென்ற இடும்பாசுரனுக்கு, அம்மலையில், சிவபூஜைக்குரிய பொருட்கள் எங்குள்ளது எனத்தெரியவில்லை. எனவே சிவகிரி, சத்யகிரி என்னும் இரு மலைகளையும் பெயர்த்து, காவடியாக எடுத்துக் கொண்டு சென்னிமலைக்கு வந்தார்.

அப்படி இடும்பன் கொண்டு வந்த மலைகளில் ஒன்றுதான் பழனி. அந்த வகையில் பழனி மலைக்கும் முந்தையது, சென்னிமலை என்கிறார்கள்.

தல வரலாறு

சென்னிமலையில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள கொடுமணல் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், நிறைய பசுக்களை வளர்த்து வந்தார்.

அவர் வளர்த்த பசுக்கள், தினந்தோறும் மேய்ச்சலுக்குச் சென்று திரும்புவது வழக்கம். அப்படி திரும்பிவரும் பசுக்களில் ஒன்று மடிவற்றி பாலின்றி நாள்தோறும் திரும்பியது. அதைக் கண்ட பசு வளர்ப்பாளர், ஒருநாள் மந்தையுடன் சென்று கண்காணித்தார்.

அப்பொழுது அந்த பசு திரும்பி வரும் வழியில் ஒரு புதர் அருகில் சென்று தானாக பால் சொரிவதைப் பார்த்தார். அந்த இடத்தை அகழ்ந்து பார்த்தபோது, முருகப்பெருமானின் சிலை இடுப்புக்கு மேல் அழகிய சிற்ப வேலைப்பாட்டுடனும், இடுப்புக்கு கீழே பாதம்வரை கரடு முரடாகவும் இருந்தது.

அதை எடுத்து வந்து சிற்பி ஒருவரின் உதவியுடன் இடுப்புக்குக் கீழே உளிகொண்டு சீராக்க முனைந்தபோது, சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.

உடனே அப்பகுதியில் வாழ்ந்த முனிவர் ஒருவரை அழைத்துக் காட்ட, அவரோ வேலவன் இப்படியே இருக்க விரும்புகிறார். அவர் விருப்பப்படி விட்டுவிடுவோம் என்று கூற, அதே நிலையில் பிரதிஷ்டை செய்து வழிபடலாயினர்.

மற்றொரு வரலாறாக அனந்தன் என்ற நாகராஜனுக்கும் வாயு பகவானுக்கும் இடையே யார் பெரியவர்' என்பதில் பலப்பரீட்சை நடந்ததாகவும், மகாமேரு பர்வதத்தை உறுதியாக சுற்றிப் பிடித்துக் கொண்ட அனந்தனிடம் இருந்து அதை மீட்பதற்காக வாயுதேவன் எதிர்த்துத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

அதுசமயம் மேருமலையின் சிகரப்பகுதி பெயர்ந்து பறந்துச் சென்று பூந்துறை நாட்டில் விழுந்ததாகவும் அதுவே சிரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி என்றெல்லாம் அழைக்கப்பட்டு தற்போதுசென்னிமலை’ என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். அம்பாளின் பெயர் அமுதவல்லி, சுந்தரவல்லி. தல விருட்சம் புளியமரம், தல தீர்த்தமாக இந்திர தீர்த்தம், இயமன் தீர்த்தம், காசிப தீர்த்தம், பட்சி தீர்த்தம், நிருதி தீர்த்தம், சிவகங்கை காசிக்கிணறு, மாமாங்க தீர்த்தம், வரடி தீர்த்தம், காளி தீர்த்தம், தேவி தீர்த்தம், செங்கழுநீர் வாவி, விஷ்ணு தீர்த்தம், நெடுமால் சுனை, பிரம்ம தீர்த்தம், தேவர் பாழி, நவவீர தீர்த்தம், சாரதா தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், தெப்பக்குளம் என இருபது தீர்த்தங்கள் காணப்படுகின்றன.

ஆனால் சென்னிமலை முருகப்பெருமானின் நித்ய அபிஷேகம் மற்றும் நைவேத்திய பயன்பாட்டிற்கு திருமஞ்சன தீர்த்தம் எனப்படும் மாமாங்க தீர்த்தத்தில் இருந்து நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இது கடும் கோடையிலும் வற்றாது பொங்கும் நீர் வளத்தைக் கொண்டது.

ஆலய அமைப்பு

சென்னிமலை அருகில் உள்ள இச்சிப்பாளையத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ளது இக்கோவில். இதன் படிக்கட்டுகள் அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக இல்லாமல், பக்தர்கள் ஏறிச் செல்ல வசதியாக சரிவாக அமைக்கப்பட்டு அதன்மீது ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

படிகளில் ஏறிய உடனே கடம்பவனேசுவரர், கந்தர், இடும்பன் ஆகியோரை தரிசிக்கலாம். பின்னர் வள்ளியம்மன் பாதம் என்ற மண்டபத்தைக் கடந்து சென்றால், முத்துக்குமார சாவான் என்னும் மலைக்காவலர் சன்னிதியை பார்க்கலாம்.

படிக்கட்டில் நடக்கும் போது நீண்ட இலைகளுடன் கூடிய துரட்டி மரம் என்ற மிகப் பழமையான மரம் ஒன்று உள்ளது.

துஷ்ட சக்திகளால் பீடிக்கப்பட்டவர்கள், இம்மரத்தை நெருங்கும்போது அவை விலகும் என்கிறார்கள். அதற்கடுத்து வரும் ஆற்றுமலை விநாயகரை தரிசித்து மேலே சென்றால் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை அடையலாம்.

கிழக்கு நோக்கிய சன்னிதியில் இருபுறமும் அம்மையும், அப்பனும் அரவணைக்க, சுவாமி தனிச் சன்னிதியில் இருந்து தனித்து அருள்பாலிக்கிறார். அவருக்கு முன்பாக விநாயகரும், வலதுபுறத்தில் உமையவல்லி உடனுறை மார்க்கண்டேசுவரரும், இடது புறத்தில் விசாலாட்சி உடனுறை விசுவநாதரும் குடும்ப சமேதராக சூழ்ந்திருந்து குமரனை மட்டுமின்றி, வழிபடும் பக்தர் களையும் ஆசீர்வதிக்கின்றனர். கருவறையின் பின்புறம் முருகனின் தேவியர் களான வள்ளி- தெய்வானை இருவரும் தனிச்சன்னிதியில் ஒன்றாக இருந்து அருள்பாலிக்கின்றனர்.

இவர்கள் இருவரது திருவுருவங்களும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பின்னால் பொன்நாக்கு சித்தரின் சன்னிதி வேல் கோட்டமாகக் காட்சியளிக்கிறது.

மலைமீது நீண்டநாள் தவம் இருந்த இவர், பின்நாளில் ‘புண்ணாக்கு சித்தர்’ என்று அழைக்கப்பட்டதாகவும், சென்னிமலை வரலாற்றை இவரே இயற்றினார் என்றும் கூறப்படுகிறது. இவர் சன்னிதிக்கு பின்புறம் சரவண மாமுனிவர் வாழ்ந்த குகையும், சமாதியும் கோவிலாக காட்சியளிக்கிறது.

சஷ்டியில் விரதமிருப்போருக்கு சென்னிமலை ஆண்டவர் குழந்தை வரம் கொடுப்பது இன்றளவும் தொடரும் நம்பிக்கையாகும். திருமணம், விவசாயம், பிற தொழில் சார்ந்த செயல்களில் ஈடுபடும்போது, இத்தல முருகப் பெருமானுக்கு அர்ச்சனைசெய்து சிரசுப்பூ உத்தரவு கேட்டு செயல்களைத் தொடங்குவதும் மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அமைவிடம்

ஈரோட்டில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் 28 கிலோமீட்டர் தொலைவிலும், பெருந்துறையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் ஈங்கூர் ரெயில் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னிமலை அமைந்துள்ளது.

Leave a Reply