குன்றத்தூர் முருகன் கோவிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்காரம் நிகழ்ச்சி !!

பூந்தமல்லி:
முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழாகடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்கார விழா நாளை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து முருகன் கோவில்களிலும் நடைபெற்று வருகிறது.
குன்றத்தூர் முருகன் கோவிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்காரம் நிகழ்ச்சி மீண்டும் நடைபெற உள்ளது. இதையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள கந்தழீஸ்வரர் கோயிலில் இன்று மாலை 4 மணிக்கு முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து நாளை மாலை மலை அடிவாரத்தில் சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 54 ஆண்டுகளுக்குப் பிறகு சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறுவதை காண சென்னை சுற்று வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூரசம்காரம் நடைபெறும் இடம் இன்று பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்து, சமன் செய்யும் பணிகள் நடை பெற்றது. மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு, ஆம்புலன்ஸ் போன்ற உயிர்காக்கும் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் பூந்தமல்லி, பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து குன்றத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
திருப்போரூரில் உள்ள கந்தசாமிகோவிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான நாளை சூரசம்ஹார நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாக அலுவலகம், கிழக்கு மாடவீதி, உள்ளிட்ட மூன்று இடங்களில் பெரிய எல்.இ.டி ஸ்க்ரீன் அமைக்கப்பட்டு கந்த சஷ்டி விழாவை பக்தர்கள் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் கந்த சஷ்டி நிறைவு பெற்றவுடன் கோயில் உள்ளே முருகப்பெருமானை தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு வசதிகளையும், தேவையான குடிநீர் உள்ளிட்டு அடிப்படை வசதி களையும் ஏற்படுத்தி உள்ளது. நாளை மதியம் ஒரு மணிக்கு மேல் பைபாஸ் சாலையில் இருந்து கோவிலுக்கு வரும் வழி மற்றும் மாட வீதியை சுற்றிலும் வாகனங்கள் கோயில் பகுதியில் உள்ளே வராதவாறு ஆங்காங்கே நிறுத்தப்பட்டு நடந்து சென்று தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பக்தர்கள் விரதம் இருந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு சூரசம்ஹாரம் நடைபெறும் அன்று மாலை தங்களின் குழந்தைகளுக்கு முருகர் வேடமிட்டு வேலுடன் சூர பொம்மைகளை வதம் செய்வர். முருகர் வேடமிடும் குழந்தைகள் பயன்படுத்தும் கிரீடம், வேல் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்ய கோயில் அருகே தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
சோழவரம் அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி பாலசுப்ரம ணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று மதியம் ஸ்ரீசண்முகர் அபிஷேகமும், மாலை ஸ்ரீ சண்முகர்வேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.பின்னர், பரதநாட்டிய நிகழ்ச்சியும் சுவாமி பிரகார புறப்பாடும் நடைபெறுகிறது.நாளை காலை யாகசாலை பூஜைகள், கலச பூஜைகள், மகா பூர்ணாகுதி,கலசபிஷேகம் உள்ளிட்டவை நடை பெறுகிறது.
மாலை 4 மணிக்கு மேல் கோவில் எதிரே சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு அபிஷேகம்,சந்தன காப்பு அலங்காரம்,மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறுகிறது.
அன்று மாலை 6 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறதுஇரவு 8 மணிக்கு பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மங்கள வாத்தியம் முழங்க திருவீதி உலா வருகிறார். நேற்று நடைபெற்ற சத்ருசம்ஹார அர்ச்சனையில் சுற்று வட்டாரத்தைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்கு மார் தலைமையில் ஊழி யர்களும், பணியா ளர்களும் செய்து உள்ளனர்.
பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் உள்ள பாலசுப்பிரமணிய கோவிலில் நாளை சூரசம்காரம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நாளை மறுநாள் மாலை திருக்கல்யாண நடைபெறுகிறது.
இதைப் போல் பொன்னேரி அடுத்த பெரும்பேடு ஸ்ரீ முத்துக்கு மாரசாமி கோயிலில் சாமி ஊர்வலதுடன் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் நாளை சூரசம்காரம் நடைபெறாது. அன்று கோவிலில் புஷ்பா ஞ்சலி நடைபெறும். இதையொட்டி காலை 11 மணிக்கு மலைக்கோயில் உள்ள மூலவர் முருகப்பெ ருமா னுக்கு தங்க கவசமும், சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.
அதைத்தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு முருகன் கோயிலின் உபக்கோயிலான சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து கொ ண்டுவரப்பட்ட மலர்களை கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் ஊர்வலமாக சரவணப்பொய்கை வழியாக மலைக்கோயிலுக்கு கொண்டு வருவார்கள்.
பின்னர் காவடி மண்டபத்தில் எழுந்தருளிய சண்முக பெருமானுக்கு அனைத்து வகையான மலர்களால் புஷ்பாஞ்சலி மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.
விழாவில் ஆந்திரா, சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை யொட்டி முருகப்பெருமானுக்கு தினந்தோறும் லட்சார்ச்சனை நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்கார விழா நாளை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் தலைமை சிவாச்சாரியார் காமேஸ்வர குருக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிவறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.