இறுதிப் போட்டியில் மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் நிறைந்து இருப்பார்கள் ; அது சவாலாக இருக்கும் – கதறும் கம்மின்ஸ்!!

இறுதிப் போட்டியில் மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் நிறைந்து இருப்பார்கள் ; அது சவாலாக இருக்கும் – கதறும் கம்மின்ஸ்!!

கொல்கத்தா:
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. நேற்று முன்தினம் நடந்த முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போடடிக்கு தகுதி பெற்றது.

நேற்று கொல்கத்தாவில் நடந்த 2-வது அரை இறுதியில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்த ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 212 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 47.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறியதாவது:-

இந்த போட்டியில் வெளியே அமர்ந்திருந்ததை விட மைதானத்தில் பேட்டிங் செய்தது எளிதாக இருந்தது என நினைக்கிறேன். தொடக்கத்தில் 2 மணி நேரம் கடினமாக இருந்தது. ஆனால் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இலக்கை நோக்கி சிறப்பாக சென்றோம். ஆடுகளம் நிச்சயம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணித்து இருந்தோம்.

ஆனால் கொஞ்சம் மேக மூட்டம் இருந்ததால் முதலில் பந்து வீசுவதில் ஏமாற்றம் அடையவில்லை. எங்கள் பீல்டிங்கை பற்றி அதிகம் பேசினோம். இந்த தொடரில் ஆரம்பத்தில் எங்களது பீல்டிங் தரமானதாக இல்லை. ஆனால் இந்த போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்தோம். குறிப்பாக 37 வயதான டேவிட் வார்னர் சிறப்பாக செயல்பட்டார்.

டிராவிஸ் ஹெட், மிடில் ஓவர்களில் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தினார். ஜாஸ் இங்கிலீஷ் சிறப்பாக பேட்டிங் செய்தார். இரண்டு தரமான சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கட்டுப்பாட்டுடன் விளையாடினார்.

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோத இருக்கிறோம். எங்களில் சிலர் இதற்கு முன்பு இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கிறோம். சில வீரர்கள் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கிறார்கள்.

இறுதிப் போட்டியில் மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் நிறைந்து இருப்பார்கள். நிச்சயம், ஒரு சார்பாக இந்திய அணிக்கு மட்டுமே ஆதரவாக இருக்கும். ஆனால் அதை சந்தித்து தான் ஆக வேண்டும். அது சவாலாக இருக்கும்.

2015-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் நான் விளையாடியது என் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான ஒன்று. இந்தியாவில் மற்றொரு இறுதிப் போட்டியில் விளையாடுவதில் ஒரு குழுவாக மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவுடன் மோதுவதில் காத்திருக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply