முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடி யேற்றத்துடன் தொடக்கம்!!

முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடி யேற்றத்துடன் தொடக்கம்!!

திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதந்தோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக காலை உத்தமர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு காலை 7:15 மணிக்கு கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.

தொடர்ந்து தங்கமுலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் சந்தனம், பால், தயிர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தர்ப்பை புல், மா இலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவினை முன்னிட்டு நாள்தோறும் காலையில் தங்க சப்பரத்திலும் மாலையில் தங்கமயில் வாகனம், அன்னவாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் 25-ந்தேதி நடைபெற்றது. இதில் சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த கிரீடம் செங்கோல் வழங்கி சிறப்பு ஆராதனை நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக கார்த்திகை தேரோட்டம் வருகிற 26-ந் தேதி காலையில் நடைபெறுகிறது. அன்று மாலையில் கோவிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply