உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல் !!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல் !!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது . கடந்த மாதம் 5-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்கிய இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் கடந்த 12-ந்தேதி முடிவடைந்தது.

இதன் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இலங்கை, நெதர்லாந்து, ஆகிய நாடுகள் 5 முதல் 10-வது இடங்களை பிடித்து வெளியேறின.

மும்பையில் 15-ந்தேதி நடந்த முதல் அரைஇறுதியில் இந்திய அணி 70 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும், கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடந்த 2-வது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தின.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது.

உலக கோப்பையை வெல்லப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

இந்திய அணி 4-வது முறையாகவும், ஆஸ்திரேலியா 8-வது தடவையாகவும் இறுதிப் போட்டியில் விளை யாடுகிறது. இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுவது இது 2-வது முறையாகும். 2003-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 125 ரன் வித்தியாசத்தில் வென்றது.

1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்றது. பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் 2-வது தடவையாக உலக கோப்பை 2011-ம் ஆண்டில் கிடைத்தது.

தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

இந்தப் போட்டி தொடரில் இந்திய அணி மிகவும் அபாரமாக ஆடி வருகிறது. தோல்வியை சந்திக்காமல் தான் விளையாடிய 10 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்தது.

இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் இறுதிப்போட்டியில் நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.

2003-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா ? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர். ஆஸ்திரேலியா பலம் வாய்ந்தது என்பதால் கடுமையாக போராட வேண்டும். வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

ஆஸ்திரேலியா முதல் 2 ஆட்டத்தில் தோற்ற பிறகு தொடர்ச்சியாக 8 ஆட்டத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

சொந்த மண்ணில் ஆடுவது இந்தியாவுக்கு கூடுதல் பலமாகும். அதே நேரத்தில் இறுதிப் போட்டி என்பதால் கூடுதல் நெருக்கடி இருக்கும்.

அகமதாபாத் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் இந்திய அணியில் மாற்றம் இருக்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தால் முகமது சிராஜ் அல்லது சூர்யகுமார் யாதவ் நீக்கப்படலாம். பேட்டிங்குக்கு முக்கியத்துவம் அளித்தால் சிராஜ் கழற்றி விடப்படுவார். ஒருவேளை இஷான் கிஷன் வாய்ப்பை பெற்றால் சூர்யகுமார் யாதவ் இடத்தில் தேர்வு பெறுவார்.

ஆடுகளத்தின் தன்மையை பொறுத்துதான் மாற்றம் இருக்குமா? என்பது முடிவு செய்யப்படும். இந்த தொடரின் 5-வது போட்டியில் இருந்து இந்திய அணியில் வீரர்கள் மாற்றம் செய்யப்படவில்லை. தொடர்ந்து வெற்றியை பெற்று வரும் அணியில் முக்கியமான இறுதி ஆட்டத்தில் மாற்றம் செய்ய கேப்டன் ரோகித் சர்மாவும் , பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் விரும்ப மாட்டார்கள்.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது. டாப் 5 பேட்ஸ்மேன்கள் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். விராட் கோலி 3 சதம், 5 அரைசதத்துடன் 711 ரன்னும், ரோகித் சர்மா 550 ரன்னும் (1 சதம், 3 அரை சதம்), ஸ்ரேயாஸ் அய்யர் 526 ரன்னும் (2 சதம், 3 அரைசதம்), கே.எல். ராகுல் 386 ரன்னும் (1 சதம், 1 அரைசதம்), சுப்மன்கில் 4 அரை சதத்துடன் 350 ரன்னும் எடுத்துள்ளனர்.

ரோகித் சர்மா சிறந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் 28 சிக்சர்கள் விளாசியுள்ளார். இதேபோல ஸ்ரேயாஸ் அய்யர் 24 சிக்சர் அடித்துள்ளார்.

பந்துவீச்சில் முகமது ஷமி முதுகெலும்பாக திகழ்கிறார். அரைஇறுதியில் 7 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவர் 6 ஆட்டத்தில் 23 விக்கெட் கைப்பற்றி இந்த தொடரில் முதல் இடத்தில் உள்ளார். இறுதிப் போட்டியிலும் ஷமி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

பும்ரா 18 விக்கெட்டும், ஜடேஜா, 16 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 15 விக்கெட்டும், முகமது சிராஜ் 13 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. அந்த அணி 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

இந்திய அணியிடம் லீக் ஆட்டத்தில் தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் ஆஸ்திரேலியா இருக்கிறது. அந்த அணி பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் இந்தியாவுக்கு சவாலாக விளங்குவார்கள்.

ஆஸ்திரேலியா பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என 3 துறைகளிலும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 2 சதம், 2 அரை சதத்துடன் 52 8 ரன்னும், மிச்சேல் மார்சல் 2 சதம், 1 அரை சதத்துடன் 426 ரன்னும், லபுஷேன் 304 ரன்னும், ஸ்டீவ் சுமித் 298 ரன்னும் எடுத்துள்ளனர். மேக்ஸ்வெல் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து சாதித்தார். அவர் 398 ரன்கள் குவித்துள்ளார். இதேபோல டிரெவிஸ் ஹெட்டும் சிறந்த அதிரடி வீரர் ஆவார்.

வேகப்பந்திலும், சுழற்பந்திலும் ஆஸ்திரேலியா சிறப்பாக இருக்கிறது. சுழற்பந்து வீரரான ஆடம் ஜம்பா 22 விக்கெட் வீழ்த்தி இந்திய போட்டித் தொடரில் 2-வது இடத்தில் உள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்களான ஹாசல்வுட் 14 விக்கெட்டும், ஸ்டார்க், கேப்டன் கம்மின்ஸ் தலா 13 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

மிகவும் பரபரப்பான இறுதிப்போட்டியை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதிரடி, விறுவிறுப்புடன் இறுதிப்போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply